திருட்டுத்தனமாக சிகரெட் பிடிப்பதை பார்த்துவிட்ட தந்தையின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக 13-வது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற 13 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சார்ஜாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் பணியாற்றிக் கொண்டு அங்கேயே தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகன்களில் ஒருவனான 13 வயது சிறுவன், அக்கம்பக்கத்தில் உள்ள சமவயது சிறுவர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கத்தை கற்றுக் கொண்டான்.
இது தந்தையின் கவனத்துக்கு வரவே, தனது அன்பு மகன் பிஞ்சு பருவத்திலேயே வெம்பிப் பழுத்து பாழாகிப் போவதை தடுக்க முயன்றார். அவனை பலமுறை தனியே அழைத்த அவர், அன்பாகவும், கோபமாகவும் அறிவுரை கூறி, சிகரெட் பிடிப்பதை கைவிடும்படியும், தீய நண்பர்களிடமிருந்து விலகி இருக்கும்படியும் புத்திமதி கூறினார்.
'இன்னொரு முறை நீ சிகரெட் பிடிப்பதை பார்த்தால்... உன்னை தொலைத்துக் கட்டி விடுவேன், ஜாக்கிரத்தை' எனவும் மகனை மிரட்டி வைத்தார். இருப்பினும், சிறுவனின் கூடா நட்போ, சிகரெட் பழக்கமோ குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சம்பவத்தன்று தந்தை வேலைக்கு சென்றிருந்தபோது 13-வது மாடியில் இருந்த பால்கனி அருகே மறைந்து நின்றபடி அந்த சிறுவன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக, வீட்டில் எதையோ மறந்து வைத்துவிட்ட தந்தை அதை எடுத்து செல்வதற்காக பாதி வழியிலேயே வீடு திரும்பினார்.
மாடி பால்கனியில் சிகரெட் புகை மூட்டத்துக்கு பின்னால் மகன் நின்றிருப்பதை கண்டு ஆவேசமடைந்த அவர், அவனை திட்டியபடியே மேலே ஏற முயன்றார். ‘அப்பா கையில் மாட்டிக் கொண்டால் முதுகுத் தோலை உரித்து விடுவார்’ என பயந்துப்போன சிறுவன், அவர் மேலே ஏறி வருவதற்குள் 13-வது மாடியில் இருந்து கீழே குதித்தான்.
மண்டை பிளந்த நிலையில், சில நொடிகளிலேயே துடிதுடித்து இறந்த சிறுவனின் உடல் சார்ஜா போலீஸ் தடயவியல் ஆய்வகத்தில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபரம் புரியாத வயதில் தீய சகவாசத்தின் விளைவாக அந்த சிறுவன் அகால மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாலை மலர்
0 comments :
Post a Comment