விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாய் பணத்தை கொடுத்தே 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லாளன் இறந்த பின்னர் துட்டகைமுனு மன்னன், எல்லாளனுக்கு நினைவிடம் ஒன்றை அமைத்து கௌரவப்படுத்தினான்.
இந்த முன்னுதாரணத்தை அடிப்படையாக கொண்டு நானும் எதிரியை மதிக்கின்றேன். எனக்கு எதிரியுடன் எந்த பகையும் இல்லை. எனினும் நாட்டின் இன்றைய ஆட்சியாளர் அவ்வாறான நற்குணங்களை அறிந்தவர் அல்ல. நான் பிரபாகரன் பற்றி பேசும் போது ஆட்சியாளரின் மனம் கஷ்டப்படுகிறது.
ஆனால் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சியாளர்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாவை கொடுத்தனர். நாங்கள் இராணுவத்தில் இருந்த போது 12 ஆயிரம் எதிரிகளை கைது செய்து அவர்களை சிறந்த முறையில் நடத்தினோம். எவருக்கும் நாங்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி செய்த எங்கள் மீது அரச ஊடங்களை பயன்படுத்தி தொடர்ந்தும் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சியை பதிவு செய்த காலத்தில் அந்த பெயரை கூட அறிந்திராத இந்த ஊடகங்கள எம்மீது சேறுபூச ஆரம்பித்துள்ளன.
அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே சவால் ஜனநாயகக் கட்சி என்பதால் எங்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இன்றைய ஆட்சியாளர்கள் செல்லும் பயணம் சரியானதா என்பதை இம்முறை தேர்தலில் அறிந்து கொள்ள முடியும்.
சர்வதேச சமூகத்துடன் மோதல்களை ஏற்படுத்தி நாட்டை ஆபத்தில் தள்ளியுள்ளனர். கடாபி போன்று தன்னை சுற்றி பெண்களை வைத்திருக்கும் தலைவர்கள் மற்றும் சுவாசிலாந்து நாட்டின் மன்னர் போன்று நிர்வாணமாக பெண்களை வைத்திருக்கும் தலைவர்களுடன் பழகும் நாட்டின் ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர் என்றார்.
0 comments :
Post a Comment