ந.குகதர்சன்-
மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்து கலா மன்றம் நடாத்திய பொங்கல் விழாவும், இந்து கலாமன்ற அறநெறிப்பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்வு திருப்பழுகாமம் திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் தலைவர் எஸ்.குகன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, போரதீவு பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ வி.கே.சந்திரகாந்தன் குருக்கள் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்!
தமிழன் எப்படிப்பட்டவனாக இருந்தல் என்றால் எவருக்கும் கட்டுப்பட்டவனாக அல்லாமல் இறைவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டவன் என்று வாழ்ந்தவன் முதன் முதலில் தனி மனித சுதந்திரத்தினை சுட்டிக்காட்டியவன் தமிழன்.
1950ம் ஆண்டு ஐநாவில் மனித சுதந்திரத்தைப் பற்றி பேசமுன்னரே திருநாவுக்கரசர் நாயனார் அவர்கள் தனி மனித சுதந்திரம் பற்றி அவரது தேவார திருப்பதிகத்தில் கூறியிருக்கின்றார்.
இப்படி எவருக்கும் கட்டுப்பட்டவனாக அல்லாமல் வீரத்தோடு வாழ்ந்தவன் தமிழன் அதிலும் குறிப்பான இந்த பழுகாமத்து மண் வீரம் செறிந்தது. அக்காலத்தில் இப்பழுகாமம் வன்னியர் ஆட்சியின் கீழ் இருந்தது அக்காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிவதற்கு இந்தப் பழுகாமத்தில் இருந்து தான் போர் வீரர்கள் கண்டி மன்னனுக்கு அனுப்பப்பட்டனர்.
அது மட்டுமல்லாது மன்னனின் பாதுகாப்பிற்கும் இங்கிருந்துதான் ஆட்கள் அனுப்பப்பட்டனர். அவ்வாறு வீர வரலாறு கொண்ட மண். வீரதம் நிறைந்தவர்கள் எம் தமிழர்கள் இதனால் தான் எம் தமிழ் புகழ் கூறும் புறநாநூறு கூறுகின்றது.
புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என்று ஒரு தமிழ் தாய் கூறுகின்றாள் என்று. இவ்வாறு வீரம் செறிந்த தமிழ் மக்கள் தமது உடமைகளை இழந்து அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
மகாபாரதத்தில் நாட்டை ஆள வேண்டிய பாண்டவர்கள் கௌரவர்களால் எவ்வாறு அடிமைகளாக்கப்பட்டு திரௌபதை துயிலுரியப்பட்டாலோ அது போலதான் இந்த நாட்டை ஆளுகின்ற அரசாங்கம் தமிழர்களின் உரிமை என்கின்ற அந்த தமிழ் தாயின் சேலையை உரித்தெரிந்திருக்கின்றது.
ஆனால் சர்வதேசத்தால் சேலை குவிந்த வண்ணம் இருக்கின்றது. தன்னை காப்பாற்ற சோர்ந்த நிலையில் இந்த அரசாங்கம் ஓடிக்கொண்டிருக்கின்றது. அங்கே பாண்டவர்கள் ஐவர் இருந்தார்கள் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இருக்கின்றன. கௌரவர்கள் நூற்றுவர் இருந்தார்கள். இடப்பட்ட கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தில் சேர்ந்து இருக்கின்றது.
எப்போதாவது ஒரு நாள் இந்த நாட்டில் பாண்டவர்கள் வெற்றி பெற்று இந்த நாட்டை ஆளும் நிலை உருவாகும் இதை யாரும் மாற்ற முடியாது. இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு இதனை நாம் கூறவில்லை மகாவம்சமே கூறுகின்றது.
இந்நாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் அரசர்களான மகோதரன் குலோதரன் என்ற அரசர்களுக்கிடையிலான மாணிக்க ஆசன பிணக்கினை தீர்ப்பதற்காகவே கௌதம புத்தர் இந்நாட்டிற்கு இரண்டாவது முறை விஜயம் மேற்கொண்டார். அவர் சமாதானத்திற்காகவே இலங்கைக்கு வந்தாரே தவிர அவரது சின்னங்களை இடத்திற்கு இடம் பரப்புவதற்கோ அல்லது பௌத்த சாலைகளை தாபிப்பதற்கு தனது பௌத்த மதத்தினைப் பரப்புவதற்கோ வரவில்லை.
அது மட்டுமல்லாது கௌதம புத்தர் பரிநிர்மானம் அடைந்து 500 வருடங்களின் பின்னர் தான் பௌத்தம் என்கின்ற ஒரு தத்துவமே தோற்றம் பெற்றது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது பௌத்த தீவிரவாதம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றனர். இன ரீதியாக எம் மக்களை ஒடுக்கி வந்தவர்கள் மத ரீதியாக எம் மக்களை ஒடுக்குகின்றனர்.
ஆகவே மத அமைப்புகள் அவற்றை தெளிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அகிம்சை வாதிகள் தர்மத்தின் வழி வந்தவர்கள். ஆகவே தர்மத்தின் வழியில் எங்கள் நியாயங்களை கேட்டு நிற்கின்றோம். எங்கள் நியாயத்தை தர கடமைப்பாடு இருந்தும் இந்த அரசு தர மறுக்கின்றது. நாங்கள் வித்தியாசமாக எதனையும் கேட்கவில்லை. எங்களுக்கான தேசிய உரிமையைத் தான் கேட்கின்றோம். இதனை தரவேண்டியது இந்த அரசு ஆனால் தாங்கள் பெரும்பாண்மை ஆசனத்தைப் பெற்றிருப்பதால் எதனையும் சாதித்து விடலாம் என்று நினைக்கின்றது.
இப்போது இந்த நாட்டில் வலுவானதொரு எதிர்க்கட்சி இல்லை என்ன நடக்கின்றது பிரதான எதிர்க் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தின் பக்கம் தாவிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு தொடர்ந்து ஒரு சூழ்நிலை செல்லுமானால் முன்பு அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைராக இருந்தது போல் எமது சம்மந்தன் ஐயா அவர்களும் எதிர்க்கட்சித் தலைவராக வரலாம்.
நாம் இந்த மண்ணில் அடிப்படை உரிமையைப் பெற்று வாழ வேண்டிய தேசிய இனம். இந்த பொங்கல் விழாவினை கொண்டாடும் நாம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமது உரிமையை பெற்று சுதந்திரமாக பொங்கள் தினத்தைக் கொண்டாடும் ஒரு நாள் விரைவில் வரும் என்பதை.
இங்கு இருக்கும் ஆன்மீக வாதிகள் தமிழ் பற்றி பேசக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். சைவமும் தமிழும் ஒன்று இதனை திருஞானசம்பந்தர் தமது தேவாரங்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே எமது ஆன்மீகப் பெரியார்கள் ஆன்மீக குருமார், சமயப் பெரியார்கள் எமது தமிழர் உரிமைகளைப் பெறுகின்ற எம் பணியில் எம்மோடு தோல் நிற்க வேண்டும் என்று அனைவரையும் அழைக்கின்றேன்
இன்று தமிழருக்கு பிரச்சனை என்றால் யார் கதைக்கின்றார்கள் கத்தோலிக்க மதகுருமார்கள் தான் கதைக்கின்றார்கள். இன்று அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்திருப்பவர்கள் யார் பௌத்த மதகுருமார்கள், நாட்டு அரசாட்சி வேண்டாம் என்று துறந்த கௌதம புத்தரின் வாரிசுகள். ஆனால் நாங்கள் ஆண்டவர்கள் ஆட்சியைத் துறந்தவர்கள் அல்ல துறந்தவர்கள் இன்று ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு ஒரு இனத்தை ஒடுக்க முயற்சிக்கின்றார்கள்.
ஆனால் ஆண்டவர்களாகிய நாம் அடிமைகளாக இருக்கின்றோம். ஆகவே எமது இந்து மதப் பெரியார்கள் எம்மோடு இணைந்து கொள்ள வேண்டும். நாம் ஒன்றுபட்டால் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வரலாம். இன்று எம்மைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற புலனாய்வாளர்களுக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.
எனவே அனைவரும் ஒன்று பட வேண்டும். சைவம் பேசுகின்றவர்கள் தமிழும் பேச வேண்டும் ஏனெனில் இன்று இனப்பிரச்சினையை மூடி மறைக்கும் மதப்பிரச்சனை தோற்றப் பெற்று வருகின்றது. இன்று எங்கு பார்த்தாலும் பன்சாலை கட்டுகின்றார்கள். இராணுவ முகாம்கள் இருக்கும் இடமெல்லாம் பன்சாலைகள். ஏனெனில் இவை அவர்களின் பூர்வீகம் என்று காட்டுவதற்காக ஒரு திட்டமிட்ட நடவடிக்கை.
நாம் கடுமையாக சமயத்தை சுட்டிக்காட்டி பேசினால் எம்மைச் சமய தீவிரவாதிகள் என்கின்றார்கள். ஆனால் பௌத்த பயங்கரவாத்தை பேசுகின்ற பொது பலசேனா மற்றும் இராவண பலயா இன்னும் எத்தனையோ சிங்கள அமைப்புகள் உருவாகி பௌத்த தீவிரவாம் பேசுகின்றார்கள் அவர்களுக்கு எந்த விசாரணைகளும் இல்லை.
எங்கள் தமிழை நாம் பாதுகாக்க வேண்டும் நாம் எமது உரிமை என்கின்ற நிலையில் எமது மதத்தினையும் பாதுகாக்க வேண்டும். அரசாங்க தரப்பில் இருப்பவர்களும் தற்போது சமய ரீதியில் செயற்பட ஆரம்பித்துள்ளனர். எமது சமயத்தினுள் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். எங்கள் கையை வைத்தே எமது கண்ணைக் குத்தப் பார்க்கின்றார்கள் எனவே நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment