எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறுவது உறுதி. அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உட்கட்சி மோதலில் சிக்கித் தவிக்கிறது. அதேவேளை ஜே.வி.பி. போன்ற கட்சிகளையும் மக்கள் நிராகரித்துள்ளார்கள். எனவே அரசாங்கம் இந்த தேர்தலில் சவாலின்றி வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கு கடந்த தேர்தலில் பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஆனால் அவர்களின் கனவு நிறைவேறவில்லை. அதேவேளை அவ்வாறான எதிர்க்கட்சிகள் தன் மற்றும் மேல் மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுகின்றன. எனவே எமது வெற்றி மேலும் இலகுவாயுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சி போன்றன அரசாங்கத்துக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அதனைக் கடந்த மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல்களில் காணமுடிந்தது.
கடந்த தேர்தலில் அறிமுகமான சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக்குகளையுமே பெற்றுக் கொண்டது. அதேநிலைதான் தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களிலும் இடம்பெறும்.
சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி குறித்த இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 25 ஆசனங்களை பெறப்போவதாகக் கூறியுள்ளனர். அது ஒருபோதும் முடியாத காரியம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் எம்மோடு இருக்கும் வரை எமது வெற்றியைத் தடுக்க முடியாது.
சிறுபான்மை கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்றன தனித்துப் போட்டியிட்டாலும் அவர்கள் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர். எனவே அவர்கள் பெறுகின்ற ஆசனங்களும் எமக்கே சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment