பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலய கல்வி செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள்


எம்.வை.அமீர்-
ல்வி சகலருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தினதும் ஏன் சாதாரணமாக சிந்திக்கக்கூடிய சகலரதும் எதிர்பார்ப்பாகும்.இந்த எதிர்பார்ப்பு என்ற வட்டத்துக்குள் எந்த மாணவனோ அல்லது பாடசாலையோ விதிவிலக்காக அமைய முடியாது. இலவசக்கல்வி, பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை என மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக அரசாங்கம் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வரும் இன்றைய நிலையில் அரசாங்கம் கல்விக்காக அதிக பட்ச நிதியையும் செலவிடுகின்றது. இவ்வாறு செலவிடப்படும் பணமானது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சரியான திட்டமிடலுடன் செய்யப்படுகின்றதா?

என்றால், இங்கு பொத்துவில் அக்/மினாறுல் உலூம் வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் விதிவிலக்காகவே தெரிகின்றது.

அரசாங்கம் காலத்துக்கு காலம் அதிகமான ஆசிரிய நியமனங்களை வழங்கி வருகின்ற இன்றைய சுழலிலும் அக்/மினாறுல் உலூம் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு இப்படியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை, என இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.

காலத்துக்கு காலம் வலம் வரும் அரசியல்வாதிகள் கூட அக்/மினாறுல் உலூம் வித்தியாலயத்தை கண்டு கொள்ளாமல், ஓய்வு பெற்றுச்செல்வோரின் கூடாரமாக விட்டுள்ளதாக பாடசாலையை சுற்றியுள்ளவர்கள் கூறுகின்றனர்.

பொத்துவில் கல்வி கோட்டத்தில் அக்/மினாறுல் உலூம் வித்தியாலயம் ஊரின் நகர்ப் பகுதியில் P/01 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. பழம் பெருமைவாய்ந்த பாடசாலைகளின் வரிசையில் இப்பாடசாலை முதன்மையானதாகும். குறித்த பாடசாலையில் தரம்-01 தொடக்கம் தரம்-05 வரையான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள். இதில் 265 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் உள்ளனர். விசேடமாக கூறுமிடத்து இந்தப்பாடசாலை நவீன கல்விக் கொள்கைக்கு அமைவாக அக்/அல் இர்பான் மகளிர் கல்லூரியின் ஊட்டல் பாடசாலையாகும்.

அக்/மினாறுல் உலூம் வித்தியாலயத்தின் அண்மைக்கால கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பின்னடைவான நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பாடசாலையின் பௌதீகச் சூழல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

அதிமேதகு ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையின் கல்விக் கொள்கைக்கு அமைவாக பல புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் வினைத்திறனான எந்தவொரு செயற்பாட்டினையும் அவதானிக்க முடியாதுள்ளமை இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மன வேதனை அளிப்பதாக கூறுகின்றனர். இதனை பறைசாற்றும் வகையில் அண்மையில் வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையில் எந்தவொரு மாணவரும் சித்தியடையாத நிலை இப்பாடசாலையின் கல்விப் பின்னடைவினை எடுத்துக்காட்டுகின்றது.தற்போது இப்பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் கடந்த இருபது வருடங்களாக இதே பாடசாலையில் பணியாற்றுகின்றார்.கல்விப் பின்னடைவுக்காக இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள்முன்வைக்கும் காரணங்கள் பின்வருமாறு

1. பாடசாலையில் கடமை புரியும் ஆசிரியர்களுள் பலர் மிகவும் நீண்ட காலமாக கடமை புரிந்து வருகிறார்கள். (பத்து, பன்னிரெண்டு வருட காலமாக) சில ஆசிரியர்கள்அரசியல் பின்புலத்துடன் இருபது வருடங்களாக் கற்பித்து வருகின்றார்கள். பெரும்பாலான ஆசிரியர்களின் வீடுகள் பாடசாலையில் இருந்து 100M க்குள் அமைந்துள்ளது. இதனால் பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

2. பதினான்கு ஆசிரியர்களில் 04 ஆண்களும் 09 பெண்களும் உள்ளனர். இவர்களுள் பலர் ஓய்வு பெரும் நிலையினை அடைந்துள்ளனர் இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடு மிகவும் பாதிக்கப்படுகின்றது.

3. வலயக்கல்வி அலுவலகம் மற்றும் கோட்டக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படும் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி வகுப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையினைக் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த செப்டம்பர் 26ம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 02இல் முடிவடைந்த அத்தியவசிய கற்றல் தேர்ச்சி தொடர்பான செயல் அமர்வுக்கு எவரும் கலந்து கொள்ளாமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். குறித்த நிகழ்வில் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

4. ஒவ்வொரு வருடமும் பருவ மழை ஆரம்பிக்குமிடத்து பாடசாலை வளவு முழுவதுமாக நீர் தேங்கி வகுப்பறைக்குள் நீர் செல்வதனால் மழை காலங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

5. பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு அமைப்புக்களின் கூட்டங்கள் பெரும்பாலும் மினாறுல் உலூம் வித்தியாலயத்திலேயே இடம் பெருகின்றது. கூட்டத்திற்கு சமூகமளிப்பவர்கள் புகைத்துவிட்டு அதன் கழிவுகளை வகுப்பறைகளினுள்ளும் முற்றத்திலும் போடுவதனால் பிஞ்சு உள்ளங்களில் தாக்கம் ஏற்படுகின்றது. மேலும் வகுப்பறைகளை ஒழுங்கினப்படுத்தி இருப்பதால் அடுத்த நாள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்கள் பெரிதும் கஸ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.

6. பொத்துவில் கோட்டத்திலுள்ள அனேகமான பாடசாலைகளில் சிங்கள மொழிக் கற்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது இப்பாடசாலையில் இதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

7. மாணவர்களுக்கான உணவு சமைக்கும் இடம் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது. இதனால் கூடுதலான மாணவர்கள் வழங்கப்படும் உணவுகளை புறக்கணிக்கக் கூடியதாகவும் உள்ளது.

வலைய கல்விப்பணிப்பாளரே!இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுகளின் மன ஆதங்கத்தை கவனத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இப்பாடசாலையினை மறுசீரமைத்து மாணவர்கள் விருப்புடன் கல்வி பயிலும் பாடசாலை சுழலை ஏற்படுத்துவதோடு ஆசிரிய குழாத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமாறு அன்பாய்க் வேண்டி நிற்கின்றனர்..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :