அல்-ஹிதாயா பெண்கள் பாடசாலையாக மாற அதற்கான ஆயத்தை மேற்கொள்ளவும் - உதுமாலெப்பை


ஏ.எல் ஜனூவர்
பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தினை பெண்கள் கல்லூரியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்களை தற்போது இருந்தே பாடசாலை சமூகம் மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஆரம்ப வகுப்பு மாணவர் இருப்பும், பதினோராம் வகுப்பு மாணவர் தரிப்புமான 'அகரத்திற்கு ஆரம்பமும் சிகரத்திற்கு ஆயுதமும்' கல்வி விழா கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம். சமட் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்று எமது பிரதேசங்களில் எல்லா ஊர்களிலும் பெண்களுக்கான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வளர்ந்து வருகின்றன. தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் எதிர் காலத்தில் நமது எல்லா ஊர்களிலும் பெண்கள் கல்லூரிகளை உருவாக்குவது தொடர்பாக திட்டங்களை தயாரிக்குமாறு நமது பிரதேச கல்வி சமூகத்திடம் பல ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை விடுத்தார். அந்த கனவு நனவாகி தற்போது எல்லா ஊர்களிலும் பெண்களுக்கென்று தனியான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வளர்ந்து வரும் இவ்வேளையில் பாலமுனை கிராமத்தில் மாத்திரம் பெண்களுக்கான கல்லூரி இது வரை அமைக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே எதிர்காலத்தில் அல்-ஹிதாயா வித்தியாலயத்தினை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்து அனைத்து வசதிகளுடனான பெண்கள் கல்லூரியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாம் இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியள்ளது.

அல்-ஹிதாயா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அன்று தொட்டு இன்று வரை அக்கரையுடன் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் இப்பாடசாலை சமூகத்தினரை நான் பாராட்டுகின்றேன். இக்கல்லூரியின் அதிபராக நீண்ட காலமாக செயற்பட்டு வரும் அதிபர் எம்.சீ.எம். சமட், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர் குழாத்தினரையும் நான் பாராட்டுகின்றேன். நமது மாணவ மாணவிகளை நல்ல ஆளுமையுள்ளவர்களாகவும் நமது கலை, கலாச்சார விழுமியங்களுடன் வாழக்கூடியவர்களாகவும் உருவாக்குவதுடன் தற்போதய உலக மாற்றங்களுக்கேற்ப நமது மாணவ மாணவிகளை தயார்படுத்தி அவர்களின் கல்வி வளர்ச்சியிலும் நமது ஆசிரியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இவ்வுலகில் இறைவன் ஒவ்வொருவருக்ககும் ஒவ்வொரு விதமான செல்வங்களை வழங்கியுள்ளான். அதில் ஆசிரியர் பதவி சமூகத்தில் மிகவும் கௌரவமான ஒரு செல்வமாகும் நமது மாணவ மாணவிகள் மீது உண்மைக்குண்மையாக அன்பு வைத்து நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு நமது ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள். நாம் எந்தப் பதவியில் வகித்தாலும் அன்று நமக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை காணும்போது எமது உள்ளங்;களில் நடுக்கம் ஏற்படுகின்றது. அவ்வாறே நாம் இன்றும் தொடர்ந்தும் அவர்களை கௌரவ படுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

அப்போது இருந்த கல்வித்திட்டத்தில் பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளில் உறவுகளில் உயிர் இருந்தது. பெற்றார்கள் நமது பிள்ளைகளை அதிபர், ஆசிரியர்களிடம் பாரம் கொடுத்து விட்டு எமது பிள்ளைகள் ஏதும் தவறு செய்தால் என்ன தண்டனை வழங்கியாவது சிறந்த மாணவர்களாக உறுவாக்கித்தாருங்கள் என்று கேட்பார்கள். அந்தளவுக்கு நமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை பராமரிக்கின்ற பணியினை பெற்றார்கள் அதிபர், ஆசிரியர்களிடம் அன்று வழங்கினார்கள். 

இதனால் மாணவ மாணவிகள் பெற்றோர்களை விடவும் ஆசிரியர்களிடம் கட்டுப்பட்டு கௌரவத்துடன் நடந்தார்கள். ஆனால் இன்று துரதிஸ்டவசமாக இன்றுள்ள கல்வித்திட்டத்தின் படி அதிபர்களும், ஆசிரியர்களும் மாணவர்கள் செய்யும் தவறுகளுக்காக சிறுதளவு தண்டிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்று உருவாகியுள்ளது. இது வேதனைக்குரிய விடயமாகும்.

நமது ஆசிரியர் சமூகம் தங்களது மாணவ மாணவிகளை சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் இப்பாடசாலையிலிருந்து வெளியேற்ற வேண்டும். எனக்கனவு கண்டு அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறு உண்மைக்கு உண்மையாக நமது மாணவர்கள் மீது அன்பு வைத்து செயற்படும் ஆசிரியர்கள் நமது பிள்ளைகளின் நலனுக்காக சிறு தண்டனை வழங்கினால் கூட அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக மாணவ மாணவிகளுடன் பெற்றோரும் இணைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முனைவது கவலைக்குரிய விடயமாகும்.

இதன் மூலம் நமது பிள்ளைகளின் கல்வி செயற்பாட்டில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருவதுடன் உண்மைக்கு உண்மையாக நமது பிள்ளைகள் மீது அன்பு வைத்து செயற்படும் ஆசிரியர் சமூகத்திற்கு கவலை தரும் விடயமாகும். எனவே நமது பெற்றோர் பாடசாலை சமூகத்துடன் இணைந்து நமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் கண்ணுங்கருத்துமாக இருந்து அதிபர், ஆசிரியர்களுக்கிடையில் நல்ல ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்தி நமது பிள்ளைகளின் நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அத்துடன் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்கள் பரீட்சையில் வரலாற்று பெறுபேறுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். இதற்காக மாணவர்களும், பாடசாலை சமூகத்தினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இப்பாடசாலையின் வளர்ச்சியில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் நானும் பக்க பலமாக இருப்போம் எனத்தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் யு.எல்.காஸீம்,பிரதி அதிபர் கே.எல்.உபைதுல்லா அட்டளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.எல் பாரின் மின்ஹாஜ் வித்தியாலய அதிபர் எம்.எஸ் அனிபா அல் அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ அன்ஸார் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :