பழுலுல்லாஹ் பர்ஹான்-
காலி, ஹிக்கடுவ பகுதியில் அண்மையில் இரு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு தனது கடமையைச் செய்யத் தவறிவரும் அரசாங்கத்தின் போக்கையும் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
இலங்கையில் அண்மைக் காலமாக சிறுபான்மையினரின் மததலங்களை இலக்கு வைத்து பௌத்த பேரினவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் தொடரில் காலி ஹிக்கடுவையில் அமைந்துள்ள கல்வாரி மீட்பு தேவாலயம் மற்றும் அஸ்ஸெம்ப்ளி ஒப் கோட் ஆகிய இரு தேவாலயங்கள் மீது கடந்த 12 ஆம் திகதி பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
20 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 200 பேர் அடங்கிய குழுவினரே இந்த தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இவர்களில் 26 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது பொலிசாரின் கடப்பாடாகும்.
துரதிஷ்டவசமாக இந்தத் தாக்குதல் நடைபெற்ற சமயம் பொலிசார் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து இலகுவாக வெளியேறிச் செல்ல பொலிசார் உடந்தையாக இருந்ததாகவும் தேவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொலிசார் காவியுடை அணிந்தவர்கள் இது போன்ற அத்துமீறல்களைப் புரிகின்றபோது கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. தம்புள்ளை மற்றும் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சமயமும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்தின் போதும் பொலிசார் தமது கடமையைச் செய்யாது இது போலவே வேடிக்கை பார்த்ததையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
இந்நிலையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலங்களை இலக்கு வைத்து கடந்த பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் வரையறையின்றி தொடர்ந்து கொண்டிருப்பதும் இது விடயத்தில் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் பராமுகமாகச் செயற்படுவதும் கவலைக்குரியதாகும்.
இதுவரை சுமார் 30 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பௌத்த பேரினவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள போதிலும் சம்பந்தப்பட்ட எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை. மிகத் தெளிவான முறையில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றவாளிகள் இனங்காணப்பட்ட போதிலும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது மௌனம் காக்கப்படுவதானது அரசாங்கம் மீதும் பாதுகாப் புத்தரப்பு மீதும் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
அதேபோன்றுதான் பல இந்துக் கோவில்கள் தாக்கப்பட்டும் சிலைகள் உடைத்து வீசப்பட்டும் அராஜகங்கள் புரியப்பட்டுமுள்ளன. மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கிறிஸ்தவ மக்களின் வழிபாடுகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் உச்சக்கட்டமாக ஹிக்கடுவையில் இரு தேவாலயங்கள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கும் வழிபடுவதற்குமான உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் 'உத்தியோகபூர்வமற்ற பொலிசார்' என தம்மைக் கூறிக் கொள்ளும் சில பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மதத் தீவிரவாத தாக்குதல்கள் இதன் பிற்பாடும் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் இந்நாட்டின் எதிர்காலமே நாசமாகிவிடும்.
உண்மையில் இவ்வாறான மதத் தீவிரவாத சிந்தனை கொண்டோர் மக்களை நல்வழிப்படுத்துகின்ற மத தலங்களை தாக்கி அழிப்பதை விடுத்து நாட்டு மக்களின் ஒழுக்க கலாசார விழுமியங்களுக்கு வேட்டு வைக்கும் வகையில் அதிகரித்துச் செல்லும் கெசினோ நிலையங்களுக்கு மதுபான சாலைகளுக்கும் எதிராகவே தமது கவனத்தைச் செலுத்தவேண்டும். அதுவே இந்த நாட்டை நேசிக்கின்ற உண்மையானமத தலைவர்களின் கடப்பாடாகும்.
சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் பல நூற்றுக் கணக்கான கசினோ சூதாட்ட நிலையங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கிவருகின்றன. போதாக்குறைக்கு உலகின் முன்னணி கசினோ ஜாம்பவான்களும் இலங்கையில் கால் பதிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கசினோ உள்ளிட்ட நாட்டின் மத கலாசார விழுமியங்களுக்கு முரணான விடயங்களுக்கு எதிராக அணி திரளவேண்டியதே இவர்களது கடப்பாடாகும். அதைவிடுத்து மனிதர்களை அன்பினால் நெறிப்படுத்தி அற வழியில் ஒழுக்கமூட்டி இந்நாட்டின் நற்பண்புள்ள குடிமக்களாக வாழ்வதற்கு வழிகாட்டும் மதஸ்தலங்களை இலக்கு வைப்பது நாட்டை படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும். இதுவிடயத்தில் அரசாங்கமும் தனது கடப்பாட்டை மறந்துவிடக் கூடாது.
எனவேதான் சிறுபான்மை மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் அதனுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
0 comments :
Post a Comment