-நிந்தவூர் நேசன்-
நிந்தவூல் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுலகத்தை அம்பாறைக்கு இடமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருக்கு இரு தடவைகள் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதும் கடந்த இரு வாரங்களாக இது தொடர்பான கடிதம் அதிகார சபை தலைவரால் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அலுலகத்தை இடமாற்றும் நடவடிக்கை இன்னும் இழுபறியில் உள்ளதுமட்டுமன்றி, ஊழியர்களும் திரிசங்கு நிலைக்கு ஆட்பட்டுள்ளனர். எவ்வாறிருந்தபோதும் அவர்கள் நிந்தவூர் அலுலகத்திலேயே ஒப்பமிட்டு வருகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த போது நிந்தவூரில் அவரால் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடடத்திலேயே மாவட்ட நிர்வாக அலுலகம் இயங்கி வருகின்றது. இதனை சிங்களப் பகுதிக்கு மாற்றும் முயற்சியின் ஒரு கட்டமாக அம்பாறைக்கு உடனடியாக இடமாற்றுமாறு இம்மாத ஆரம்பத்தில் அதிகார சபை தலைவர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார். தனக்கு இடமாற்றம் கிடைப்பதை தவிர்ப்பதற்காக மாவட்ட உதவிப் பணிப்பாளரும் சிங்கள மேலதிகாரிகளுக்கு துணை போனதாக கருதப்படுகின்றது.
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் இது குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கேட்டுக் கொண்டதையடுத்து அவ் அலுவலகம் அம்பாறைக்கு மாற்றப்படாது என்று அறிவித்தார். இருப்பினும் முன்னர் அனுப்பப்பட்ட கடிதத்தை ரத்துச் செய்யும் புதிய கடிதம் அனுப்பி வைக்கப்படாததையடுத்து, பாராளுமன்ற ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் மு.கா. செயலாளர் நாயகம் ஹசன்அலி பிரஸ்தாபித்ததை அடுத்து ஆவேசமடைந்த அமைச்சர் டலஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை திட்டித்தீர்த்ததுடன், அலுவலகம் மாற்றும் நடவடிக்கையை கைவிடுமாறும் பணித்தார்.
இருந்தபோதிலும் உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் அம்பாறைக்கு சென்று கடமையாற்றுமாறு 10 இற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு உதவிப் பணிப்பாளர் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஆனபோதும், ஏனைய சிலரைப்போல் இந்த சமூகத்தின் சொத்தை சிங்களவர்களுக்கு தாரைவார்க்க விரும்பாத ஊழியர்கள், தொடர்ந்தும் நிந்தவூர் அலுவலகத்திலேயே ஒப்பமிட்டு வருகின்றனர்.
அம்பாறைக்கு அலுலகம் கொண்டு செல்லப்படாது என்று மு.கா. அரசியல்வாதிகள் கூறி வருகின்றபோதிலும், அமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய கடிதம் கிடைக்காத நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நிந்தவூரில் கையொப்பமிட முடியும் என்று ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments :
Post a Comment