அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது - விக்னேஸ்வரன்


னாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது நான் சந்தித்தேன். அன்று என்னிடம் கேட்பதை கொடுப்பேன், பிரதம செயலாளரை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வலி. தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரப் பரிசளிப்பு விழா அப்பிரதேச சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

’2009இல் நடத்துவதாகக் கூறிய வடமாகாண சபைத் தேர்தலை இழுத்தடித்து வந்து, பின்னர் இந்தியாவின் நெருக்குதல் காரணமாக 2013இல் நடத்தினார். அத்துடன், அத்தேர்தலில் இராணுவத்தினர் உதவியுடன் வென்றுவிடலாம் எனவும் எண்ணியிருந்தார். எனினும், அது எதிர்விதமாக அமைந்தது. இதனை ஜனாதிபதியினால் பொறுக்க முடியவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகத் தனக்கே பழக்கமான முறையில் நடக்கத் தொடங்கினார்.

ஆற்றின் அடுத்த புறத்தில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று தெற்கிலுள்ள சிங்கள மக்களே கூறுவர். எமது ஜனாதிபதி ஆற்றின் அடுத்த பக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.

கேட்பதைத் தருவதாக கடந்த 2ஆம் திகதி உற்சாகமாகக் கூறிய ஜனாதிபதி, அதனையெல்லாம் நிராகரித்து விட்டு கேட்காதவற்றைத் தருவதாகப் பேரம் பேசினார். அதுவும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொள்கின்றோமோ? என்பதை அறிந்தும் அறியாதது போல நடந்துகொள்கின்றார். இதனால், ஏற்படப்போகும் பாதிப்புக்களுக்கு அவரே முகம்கொடுக்கவேண்டும்.

நாங்கள் நாளை நீதிமன்றங்களை நாடலாம். என்ன அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கருத்தொருமிப்புக்கு மாறாக அலுவலர் (பிரதம செயலாளர்) ஒருவர் பதவியில் தொடர்ந்திருக்கின்றார் என்ற கேள்வி நீதிமன்றங்களைக் கேட்ட வைக்கலாம். இருந்தும், அவையல்ல எமக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மக்களை இன ரீதியாகப் படுகொலைக்கு ஆளாக்கியது அரசாங்கம் என்று அகில உலகமும் கூறும்போது, அவர்களின் இன்றைய மாகாண சபைக்கு எதுவுமே வழங்கமாட்டோம் என்று ஜனாதிபதி அடம்பிடிக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்.
தமிழருக்கு எதுவும் கொடுக்கவில்லை, மறுத்துவிட்டேன் என்று கூறினால்தான் வரப்போகும் தேர்தலில் தனக்குச் சிங்களவர்களின் வாக்குகள்; கிடைக்கும் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார் போல தெரிகின்றது.

அத்துடன், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் அவருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன. மேலும் மேலும் அதிகாரத்தை தம்வசப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அவரைச் சர்வதிகாரி என்று அடையாளம் காட்ட அனுசரணையாக இருந்து வருகின்றன. அண்மைக் காலங்களில் அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்றே சகல நாடுகளிலும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

எப்பொழுதும் அதிகாரங்களை தனிப்பட்டவர்கள் அல்லது குடும்பங்கள் அல்லது கட்சிகள் அல்லது இராணுவம் தம்வசம் பதுக்கிப் பாதுகாக்க எத்தணிக்கின்றனவோ அது ஈற்றில் கவலையையே அவர்களுக்கு உண்டாக்கும். அண்மைக்காலத்தில் அவ்வாறு சர்வதிகாரிகளாக மாறிய நபர்கள் பலர் இறுதியில் தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் படியாக நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

எகிப்தின் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பௌரவ் முஷக்ரவ், ஈராக்கின் சதாம் ஹுசேன் எவ்வாறு தமது தவறுகளை உணர்ந்து கொண்டார்கள் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஆட்சி செய்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையையும் அவருக்கு உலகம் ஈர்த்த மதிப்பையும்
ஆட்சியாளர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.(SLM)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :