அந்தமான் யூனியன் பிரதேசம், போர்ட் பிளேரில் உள்ள பே தீவு அருகில் நேற்று மாலை விபத்துக்குள்ளாகிய தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு அரசின் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் வருவாய்த் துறை செயலாளர் ஆகியோரை போர்ட் பிளேருக்கு அனுப்பி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் வருவாய்த் துறை செயலாளர் ஆகியோர் இன்று காலை போர்ட் பிளேருக்கு சென்று, அங்கு அவர்களுக்குத் தேவையான உதவிகளை அந்தமான் நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.
இதன் விளைவாக, விபத்துக்குள்ளான படகில் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 நபர்களில், உயிரிழந்த 16 நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு விமானம் மூலம் அரசு செலவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு கால்நடைத் துறை அமைச்சர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று, தனித்தனி அமரர் ஊர்திகள் மூலம் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று, அவர்களது உறவினர்களிடம் உடல்களை ஒப்படைத்துள்ளனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட 15 பயணிகளும் விமானம் மூலம் அரசு செலவில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்பு, அவரவர் இல்லங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள ஒரு சுற்றுலாப் பயணியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தமிழக அரசின் அதிகாரிகள் அந்தமான் நிருவாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment