முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராடுவதால் நான் ஜனாதிபதிக்கு சங்கடமாக இருக்கிறேன் - ஹக்கீம்



டாக்டர் ஹபீஸ் -
தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை(26) கொழும்பு 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நைஸர் ஆகியோரும் உரையாற்றினர். கொழும்பு மாநகர உறுப்பினர் அனஸூம் அதில் பங்குபற்றினார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது,

நான் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த வேளையில் இந்த ஹேனமுல்லை கேம்ப் பிரதேசத்திலிருந்து வந்த இளைஞர்கள் என்னைச் சுற்றி ஓர் அரணாக நின்று உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள். அதனை நான் ஒருபோதும் மறக்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸின் பலவீனம் என்பது இந்த அரசாங்கத்தின் அங்கமாக இருப்பது எனக் கூறுகின்றனர். இன்று முஸ்லிம்கள் மத்தியில் பிரதானமாக பேசு பொருளாக இருப்பது அரசாங்கத்தைப் பற்றிய விமர்சனம்தான். அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதை அதிருப்திக்குரிய விடயமாக ஒரு சாரார் நோக்குகின்றனர். அது அஜீரணமானதாகவும், ஜீரணித்துக்கொள்வதற்கு கஷ்டமானதாகவும் அநேகருக்கு தோன்றுகின்றது.

அதேவேளையில், முஸ்லிம் காங்கிரஸூக்குள்ள பலம் என்னைப்பொறுத்தவரை, அரசாங்கத்தினுள்ளேயே இருந்துகொண்டு முதுகெலும்புடன் தனித்துத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திராணியாகும்.

தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக் கொண்டாலும், தனித்துப் போட்டியிடும் முடிவை நான் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டேன்.

நான் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அதனை பலவீனப்படுத்துவதாக நினைப்பவர்களும் இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் நான் உள்ளிருந்து கொண்டே போராடுவதால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் நான் மிகவும் சங்கடமாக இருக்கிறேன்.

மற்றவர்கள் பேசுவது போலெல்லாம் எனக்குப் பேச முடியாது. எனது பேச்சுக்கு ஒரு கனதியும், பக்குவமும் இருக்க வேண்டும். அதனையே சமூகமும் என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

அமைச்சரவையில் நடப்பவற்றையெல்லாம் தெருவில் வந்து கதையளக்க முடியாது. அது நாகரிகமற்றது மட்டுமல்ல, கூட்டுப்பொறுப்பை மீறும் செயலுமாகும். சம்பிரதாயத்திற்கு விரோதமானதும் கூட.

எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் தாமாகவே முன்வந்து தாறுமாறாக கருத்துகளை தெரிவிப்பார்கள். அவசியமானால் மட்டுமே நான் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம்.

எந்த அமைச்சராவது இந்த அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்துள்ளனரா? நான் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற பின்னர் இந்த அரசாங்கத்திலிருந்து இரண்டு முறை வெளியேற நேர்ந்தது, ஒரு முறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். அடுத்து நானாகவே வெளியே வந்தேன். இவ்வாறு அரசாங்கத்தை விட்டு தானாக வெளியே வந்த யாராவது அமைச்சர் ஒருவர் இருக்கின்றாரா?

அரசாங்கத்தை விட்டுவிட்டு வெளியில் இறங்கினால் ஓரிரு கிழமைகள் என்னை தூக்கி தோளில் சுமந்துகொண்டு செல்வார்கள். ஆனால், அப்படிச் செய்வதால் இன்றுள்ள நிலைமை தலைகீழாக மாறிவிடுமா? மறைந்த எமது தலைவர் கூறியதைப் போன்று சரியான முடிவை சரியான சந்தர்;ப்பத்தில் தான் எடுக்க வேண்டும். பிழையான சந்தர்ப்பத்தில் எடுக்கும் சரியான முடிவும் பிழையானதே. இதனை நான் முன்னரும் கூறியிருக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்டு விட்டு, அரசாங்கத்துக்கு முட்டு கொடுத்ததாக கூறினார்கள். ஆசாத் சாலி அதனை பெரிய பிரச்சினையாக்கி மந்திரம் மாதிரி உச்சரித்துக்கொண்டு போகிறார். அந்தத் தேர்தலில் தாமும் தெரியாமல் போய் எங்களுடன் போட்டியிட்டதாக கூறித்திரிந்தார். அவர் கெஞ்சப் போய் தான் நாங்கள் அவரை அப்பொழுது சேர்த்துக்கொண்டோம். நாங்களாக வலிந்து அவரை சேர்த்துக்கொள்ளவில்லை.

அந்தத் தேர்தலில் நாங்கள் சேர்ந்து ; போட்டியிட வேண்டுமென்று கட்சிக்குள் சதி நடந்தது. ஆனால், அன்றிருந்த சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவது தான் எங்களுக்கு இருந்த சாணக்கியமான அணுகுமுறையாக தென்பட்டது.

முடிவுகளை கட்சியின் மீது திணிக்க முடியாது. மிகவும் சாதுரியமாக, மெதுவாக அதனை நகர்த்த வேண்டியிருந்தது.

அரசாங்கத்துடன் பேசி, எங்களுக்கு எத்தனை ஆசன ஒதுக்கீடுகள் தர முடியுமென கேட்டோம். அம்பாறை மாவட்டம்தான் எங்களது கட்சியின் கோட்டை. அவர்கள் தர விரும்பும் ஆசனங்களை மட்டும் எங்களால் பிச்சையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு வேண்டிய எண்ணிக்கையிலான ஆசனங்களைத் தந்தால் சேர்ந்து கேட்பது பற்றி சீர்தூக்கி பார்க்கலாம் என்று அப்பொழுது கூறிவிட்டேன்.

அமைச்சர் அதாவுல்லாஹ், ரிஷாத் பதியுத்தீன், ஹிஸ்புல்லாஹ் போன்றோரை சமமாகப் பார்க்கின்ற பார்வையும், எங்களை பார்க்கும் பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. அவர்களை வளர்த்து, போஷித்து எங்களுக்குக் குழி பறிக்க முடியாது. இது பலமான கட்சி. முஸ்லிம்களுக்கு ஒரு பலமான கட்சி இருக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இன்று எல்லா விடயங்களும் நடக்கின்றன.

நாங்கள் தனித்து போட்டியிடும் நிலையில், இப்பொழுது இன்னுமொரு அமைச்சரையும் எங்களைப் போன்றே தனித்துப் போட்டியிடுமாறு தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவர் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களைத் துரத்தித் திரிகின்றார்.

தேர்தல்களில் தொண்டமானும் தனித்து போட்டியிடுவதைக் காண்கிறோம்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான எமது ஆதரவு அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேவைப்பட்டது. கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்திருந்தால் எமது நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

கிழக்கு முஸ்லிம் மக்கள் கூட இந்த விடயத்தில் எம்முடன் முரண்பட்டுக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து விடுவோமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கும் இருந்தது. ஆனால், தற்கால அரசியல் சூழ்நிலையையும், யதார்த்தத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நாம் எமது முடிவை மேற்கொண்டோம்.

பதுங்கித்தான் பாய வேண்டும். தலைவர் (அமீர்) உடைய அந்தஸ்தில் உள்ளவர் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. உலமா சபையில் முக்கியமானவர்கள் கூட எங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள். நாங்கள் நிதானமாகச் சிந்தித்து தீர்மானத்தை எடுத்தோம்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கில் ஆட்சியமைக்க ஒத்துழைத்திருந்தால், வடமாகாண சபை தேர்தலே நடந்திருக்காது. 13ஆவது திருத்தச் சட்டமும் இல்லாதொழிக்கப்பட்டிருக்கலாம்.

மாகாண சபை முறைமை ஒழிக்க வேண்டுமென அமைச்சரவையில் குறிப்பிடப்பட்ட பொழுது அதனை நான் வன்மையாக எதிர்த்திருக்கிறேன். இந்திய அரசாங்கத்தினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதுதான் 13ஆவது திருத்தச் சட்டம் என்று கூறப்பட்ட பொழுது, அதனை ஒழிக்கக் கூடாதென நான் வாதாடினேன்.

மாகாண சபை முறைமை வேறு மாகாணங்களைப் பொறுத்தவரை அதிக முக்கியமில்லாது விட்டாலும், வடகிழக்கிற்கு அது மிகவும் முக்கியமானது. அதனால் தான் சிறுபான்மையினர் அங்கு எமது அதிகாரங்களை ஓரளவாவது தக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம்.

அரசாங்கத்துடன் சேர்ந்து ஆறு தடவைகள் நான் புலிகளோடு பேசியிருக்கிறேன். எத்தனையோ நாடுகளுக்குப் போய் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். பிரபாகரனுடன் கூட நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருந்தாலும், புலம்பெயர்ந்த தமிழர் சமூகம் நாட்டுக்கு வெளியில் இருந்துகொண்டு பாரிய சர்வதேச அழுத்தத்தை அரசாங்கத்திற்கு எதிராக கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். அதை பக்குவமாக கையாளக் கூடிய சாணக்கியமற்ற கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ். அதேவேளையில் நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளவும் நாம் முற்படக் கூடாது. ஆனால், இந்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது.

மிக தூரநோக்கோடு அதற்கான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். முன்யோசனையின்றி வெறுமனே வீதியில் இறங்கி கோஷம் எழுப்புவதால் மட்டும் எதுவும் ஆகப் போவதில்லை. எமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை சரிவர தெரிந்து கொண்டுதான் ஒவ்வொரு விடயத்திலும் இறங்க வேண்டும்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்திலும் அங்குள்ளவர்கள் நேரடியாக கதைக்கப்போய் சிக்கலாகிப் போயுள்ளது. தெஹிவளை பிரதேசத்திலும் பள்ளிவாசலுக்கு பொலிஸார் போய் வெளியேறும்படி மீண்டும் தூண்டியிருக்கிறார்கள். அவ்வாறு வெளியேறிவிட வேண்டாம். தொழுகை நடத்திக்கொண்டிருங்கள் என்று கூறியுள்ளோம். வெளியேறினால் உரிமை பறிபோய்விடும். புளர்ஸ் வீதி, எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தை பள்ளிவாசல் விவகாரமும் இவ்வாறு தான்.

உண்மையில் இந்த விடயங்களில் சமூகம் ஒன்றுபட்டிருக்கிறது. அணுகுமுறைகளில் தான் வித்தியாசங்கள் உள்ளன.

ஆசாத் சாலி வெளியில் இருந்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பார். சிலர் அதைப் பார்த்து ஆஹா, ஓஹோ என்று பிரமிப்படைவார்கள். இவ்வாறு நடுச் சந்தியில் இருந்து வாய் கிழிய கத்துவதால் மட்டும் நாம் நமது இலக்கை அடைந்து விட முடியாது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான கட்சி என்ற காரணத்தினால் அரசாங்கத்திற்கு ஒருவித அச்சம் உள்ளது. தேர்தல் ஒன்று வரும்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருக்கிறதா, அல்லது பலவீனமாக இருக்கிறதா எனப் பார்ப்பார்கள்.

இன்றுள்ள அரசியல் நிலைவரம் வேறுபட்டது. நாங்கள் நம்பிக்கையீனத்துடன் இருக்க முடியாது. கட்சியை இன்னும் இன்னும் பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது.

முன்னர் மேல்மாகாண சபையில் பாயிஸ் என்பவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அவரது தலைவராக இருந்த ஹாபிஸ் நஸீர் அஹமத் கட்சியில் எம்மோடு மீண்டும் இணைந்தபொழுது, அவரை அமைச்சராக்கி கிழக்கு மாகாண சபையை அலங்கரித்திருக்கிறோம்.

பாயிஸூக்கு ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வேறு வேட்பாளர்கள் வென்றுவிடுவார்கள் என அவர் சிந்தித்ததன் விளைவாக,

வேறு கட்சிக்காரர்களின் சதி வலையில் மாட்டி, ஒருவிதமான உற்சாகத்தில் திரிவதாக கேள்விப்படுகிறோம். அவர் ஒரு கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்தல் ஒன்று வரும்பொழுது சுயநலத்துக்காக கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது வழமையாக நடக்கின்ற விடயமாகும். குறிப்பாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிலும் ஆட்கள் அங்கும் இங்கும் மாறுவார்கள்.

கவர்ச்சியான முகங்களைத் தேடிப் போகின்றார்கள். நடிகைகளையும், பாடகிகளையும், அழகிகளையும் அரசியலில் இறக்க ஆசைப்படுகிறார்கள். தரமான, அனுபவமிக்கவர்கள் இருக்கத்தக்கதாக, இத்தகையானவர்கள் அரசியலில் ஈடுபடுத்த முற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

எங்கைளைப் பொறுத்தவரை முடிவுகள் மிக பக்குவமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :