நாட்டின் அதிகாரத்தை சில இனவாத - தீவிரவாத சக்தி, கட்சிகள் பலமாக எதிர்க்கின்றன - அமைச்சர் ஹக்கீம்



டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர் 


டமாகாண சபையை அமைத்து, அங்குள்ள மக்கள் தமது விருப்பப்படி முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்வதற்கு முடிந்தமை முக்கியமான வரலாற்று திருப்புமுனை என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக்கிடம் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் அதிகாரப் பகிர்வைப் சில இனவாத - தீவிரவாத சக்திகளும், கட்சிகளும் பலமாக எதிர்த்து வருகின்ற போதிலும், அதனை வரவேற்கும் மிதவாத மற்றும் நடுநிலை பேணும் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் உள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பு வெள்ளிக்கிழமை (24) முற்பகல் நீதியமைச்சில் இடம்பெற்றது.

பல்லினங்கள் வசிக்கும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு எவ்வாறு கையாளப்படுகிறது என்று பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் ஹக்கீம், 1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஜூலை கலவரத்தை தொடர்ந்து இந்தியாவின் ஏற்பாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலிய அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், யுத்தகால சூழ்நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதனை வடகிழக்கில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கியதாகவும் கூறினார்.

ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் ஊடாக முதன்முதலாக தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தனது பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்த போது, அதன் முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என தாம் அறிந்து வைத்திருப்பதாக நீதிபதி எனர்ஸ்ட் பெட்ரிக் கூறினார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் தொடர்பிலும் பேராசிரியர் பெட்ரிக் அமைச்சர் ஹக்கீமிடம் இருந்து உரிய விளக்கங்களை பெற்றுக்கொண்டார். அதன் பொழுது விரைவில் புதிய சில சட்டங்களையும், சட்டத்திருத்தங்களையும் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பேராசிரியரின் கேள்வியொன்றுக்கு பதலளித்த அமைச்சர், உலகின் ரோமன் டச் சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில் இலங்கையும் குறிப்பிடத்தக்கது என கூறியதோடு, இங்கு வடபகுதியில் நிலப்பிரச்சினைகள் முதலான விடயங்களில் தேசவழமைச் சட்டமும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கற்பழிப்பு, வயது குறைந்தோருக்கிடையிலான திருமணம் என்பவற்றின் விளைவினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்கள், ஏனைய உள, உடல் ரீதியான பாதிப்புக்கள் மற்றும் ஓரின திருமண பந்தம் தொடர்பாக எழும்பும் மனித உரிமைக் குழுக்கள் பிரச்சினைகள் பற்றியும் பரஸ்பரம் கருத்துக்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்து சென்று தனி நாடாக விளங்கும் சொல்வேனிய குடியரசில் 20 இலட்சம் மக்கள் வாழ்வதாக பேராசிரியர் கூறினார். அப்பொழுது குறுக்கிட்ட அமைச்சர் ஹக்கீம், அதிகாரப் பகிர்வு வழங்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், விளைவுகளையும் எடுத்துக் கூற விழையும் தீவிரவாத சக்திகள் அதற்கு யுகோஸ்லாவியாவை முன்னுதாரணமாக காட்டுவதாகச் சொன்னார்.

யுகோஸ்லாவியா குடியரசில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாம் வசிக்கும் தனித்தனி நாட்டின் பெயரை கூறி பெருமையடையும் அதே வேளையில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தமது மாநில ஆட்சி எதுவாயினும், தாம் இந்தியர் எனக் கூறிக்கொள்வதில் பேருவகை அடைவதாகவும் பேராசிரியர் பெட்ரிக் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, மேலதிகச் செயலாளர் குமார் ஏக்கரத்ன, வெளிவிகார அமைச்சின் அதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :