ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலுக்கடியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமியாக மாறி அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியைத் தாக்கியதில் 18,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அந்நாட்டில் ஏற்பட்ட மோசமான பேரழிவில் புகுஷிமாவில் இருந்த அணுமின்உலை செயலிழக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட கதிர்வீச்சிற்குப் பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். இவாடே, மியாகி மற்றும் புகுஷிமா ஆகிய பகுதிகளே அப்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
தற்போது இந்தப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 25.9 சதவிகிதத்தினர் தலைசுற்றல், குமட்டல், உயரத்தைக் கண்டு பயப்படுதல் மற்றும் இறுக்கமாகக் காணப்படுதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிந்தது, வீடுகளை இழந்தது, நண்பர்களைப் பிரிய நேரிட்டது மற்றும் பெரிய சுவர் போன்ற நீர்ப்பரப்பு கரையைத் தாக்கியது போன்ற நிகழ்வுகள் அவர்களிடத்தில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக சுனாமியால் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் சிறுவர்களே இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய குழந்தைகளுக்கு மனோதத்துவ சிகிச்சைகள் தேவை என்றும், இல்லையெனில் பிற்காலத்தில் அவர்களது வேலைவாய்ப்பு, கல்வி சாதனை போன்றவற்றைப் பாதிக்கும் வகையில் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் கற்றல் குறைபாடுகளினால் அவர்கள் சிரமப்படக்கூடும் என்றும் இந்த ஆய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய டொஹோகு மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷிகியோ குரே தெரிவிக்கின்றார். இவர்களது குழு சர்வதேச அங்கீகாரம் பெற்ற குழந்தை நடத்தைப் பட்டியல் கொண்டு கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சென்ற ஆண்டு ஜூன் வரை இந்தக் குழந்தைகளை சந்தித்துள்ளனர்.
மனோதத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகக் குறிப்பிடும் குரே அதற்குத் தகுந்த அளவில் அங்கு மனோதத்துவ மருத்துவர்கள் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார். தாங்கள் சந்தித்ததில் 178 குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுடன் ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளனர் என்ற அவர், மற்ற குழந்தைகளும் தங்களுடைய மருத்துவ கவனிப்பின் கீழ் வருவார்கள் என்றார். இருப்பினும், இத்தகைய பாதிப்பிற்கு உள்ளான மற்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான செயல்முறைகள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை என்றும் குரே தெரிவித்தார்.
0 comments :
Post a Comment