எம்.ஐ.றியாஸ்,எம்.ஐ.பிர்னாஸ்,ஐ.ஏ.சிராஜ்
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான அளவுரீதியான கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபத்தை பாடசாலைகளில் செயற்படுத்துவது தொடர்பாக அக்கரைப்பற்று கல்வி வலய அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிக்கா மகா வித்தியாலயத்தில் நேற்று முன் தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் சீ.அகிலா,மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்,அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஸர் ஆகியோர் புதிய சுற்றுநிருபம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலய அதிபர்கள் ,பாடசாலைகளின் அபிவிருத்திக் குழுச் செயலாளர்கள்,பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப்பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சின் 07 - 2013 இலக்க புதிய சுற்று நிருபத்தின் பிரகாரம் கல்விப் பண்புசார் உள்ளீட்டினைப் பெறல் விநியோகித்தல், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் அபிவிருத்திக் குழுக்களின் பழைய சுற்று நிருபங்கள் கடந்த 2013.12.31 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்பட்டு விட்டன.
தற்போது இச் சுற்றுநிருபத்தின் பிரகாரம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் உறுப்பினராக ஒரு பெற்றோர் அல்லது சட்டப்படியான பாதுகாவலர் மற்றும் பழைய மாணவர்கள் குறைந்தது 50 ரூபா முதல் 600 ரூபா வரையான இடைப்பட்ட ஏதாவது ஒரு தொகையினை செலுத்தி அங்கத்தவரான பின்னர் பாடசாலையில் நடை பெறும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாடசாலை அபிவிருத்திக் குழுவினரை தெரிவு செய்யவதற்கான அதிகாரம் கிடைக்கின்றது.பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்தவாரக இணையாத எவரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளிலும் பெற்றோர்களையும்,பழைய மாணவர்களையும்(பழைய மாணவர் சங்கத்தால்தெரிவு செய்யப்பட்டு பெயர் குறிப்பிட்ட) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்தவராக்கி பின்னர் சட்டப்படி(விரைவாக) பொதுச் சபையினை கூட்டி பாடசாலை அபிவிருத்திக் குழுவினை தெரிவு செய்யுமாறு வலயக்கல்விப் பணிப்பாளர் இதன் போது தெரிவித்தார்.
0 comments :
Post a Comment