எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு இல்லை. ஆனால் அனைத்து விடயங்களும் வினாடிக்கு வினாடி மாற்றமடையும் என்பது சிறந்த பௌத்தர் என்ற ரீதியில் எமக்குத் தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு மாற்றமடைவதற்கும் தற்போதைக்கு நிலைமைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற தெற்காசியாகொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் மத நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
கேள்வி : அரசியலில் உங்களைப் பற்றி தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அதாவது நீங்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில் : இது இந்த இடத்துக்கு பொருத்தமான கேள்வியாக தெரியவில்லையே.
கேள்வி இல்லை. அரசியல் கேள்வியாகத்தான் இதனை கேட்கின்றோம்.
பதில் : அவ்வாறு பொது வேட்பாளராக வரும் எந்த நோக்கமும் தற்போது என்னிடம் இல்லை. பலர் என்னிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் எனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை.
கேள்வி :உங்கள் எண்ணம் மாற்றமடைவதற்கான சாத்தியம் உள்ளதா?
பதில் : சிறந்த பௌத்தன் என்ற ரீதியில் அனைத்தும் மாற்றமடையும் என்று கேட்டுள்ளீர்கள் தானே? அதாவது வினாடிக்கு வினாடி அனைத்தும் மாற்றமடையும் என்று கேள்விப்பட்டுள்ளீர்கள்தானே? எனவே அதனை கூற முடியாது. ஆனால் தற்போதைக்கு மாற்றமடையும் நிலைமையும் காணப்படவில்லை.(VK)
0 comments :
Post a Comment