மே
ல் மாகாண சபை தேர்தலில் தமிழ்க்கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு. அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு தீர்வினை பெற்றுத் தரவேண்டும். இல்லையேல் இலங்கையின் பொருளாதாரத்திலும் பாரிய வீழ்ச்சியே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று ஸ்ரீகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் நடைபெறவிருக்கும் மேல் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளன. தனித்துப் போட்டியிடுவதனால் எந்தவொரு தமிழ் கட்சியும் வெற்றி பெற முடியாது. தமிழர்களின் வாக்கு மட்டுமே பிரிபடும். இச்செயற்பாடு மேல் மாகாண தமிழர்களையே பாதிக்கும்.
அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் கட்சிகள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரே கூட்டணியாகப் போட்டி போட வேண்டும். தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே எம் அனைவரினதும் நோக்கம். அதனை சரியாகச் செய்ய வேண்டும். இனி ஒருபோதும் அரசாங்கத் தரப்பிற்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. இதனை அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், இன்று தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றியே செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் அதிக வருமானத்தினை ஈட்டித்தரும் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் மலையக மக்களின் நிலை இன்று மிகவும் மோசமான ஒன்றாகவே உள்ளது.
மலையக மக்களுக்கு எது தேவையோ அதை அரசாங்கம் பெற்றுத்தராது அநாவசிய செலவுகளையே செய்கின்றது. அரசாங்கம் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாடி வீடுகளை கட்டித் தருவதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் தேவை. அவர்களும் அதனையே கேட்கின்றனர். அம் மக்களின் வாழ்வாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதை விடுத்து அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப செய்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment