சேலம் சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (40), இவர் அந்த பகுதியில் மழலையர் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெண்களிடமும், அந்த வழியாக வந்து செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளையும் கேலி, கிண்டல் செய்து வந்தார்.
நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இவர் தனியாக வரும் பெண்களை ஆபாசமாக பேசி சில்மிஷமும் செய்ய முயன்றாக தெரிகிறது. மேலும் இரவில் மது குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் பெண்களை பார்த்து டார்லிங் என்று அழைத்து கையை பிடித்தும் இழுத்து தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேற்று இரவு 7 மணி அளவில் ஏசுராஜ் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவி டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். இதைப்பார்த்த ஏசுராஜ் அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் போய் சொல்லி அழுதார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானபேர் ஏசுராஜ் வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
இதை எதிர்பார்க்காத ஏசுராஜ் வீட்டின் மாடிக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கி கொண்டார். வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை வெளியே வர சொல்லி சத்தம் போட்டனர். இதனால் அங்கு மேலும் கூட்டம் கூடிவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் சூரமங்கலம் பொலிசாரும் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அழைத்தும் ஏசுராஜ் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இதனால் கோபம் அடைந்த இளைஞர்கள் சிலர் வீட்டு சுவர் ஏறி குதித்து மாடிக்கு சென்று கதவை உடைக்க முயன்றனர். இதை தெரிந்து கொண்ட ஏசுராஜ் மாடியில் இருந்து கீழே குதித்து ஓட ஆரம்பித்தார். இதையடுத்து இளைஞர்கள், பெண்களும் அவரை விரட்டி சென்று பிடித்தனர்.
ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு ஏசுராஜை அடித்து துவைத்தனர். செருப்பு, துடைப்பம், ஆகியவற்றால் அவரை தாக்கினர். பின்னர் ஒரு வழியாக பொலிசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாக்கியதால் அவருக்கு கண், தலை, மூக்கு என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. முகம் வீங்கி உள்ளது. அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment