கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை பண்ட் வாத்தியக் குழுக்களுக்கிடையில் போட்டி நிகழ்வு- படங்கள்





யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த ஆசிரியர்கள் இங்குள்ள பாடசாலைகளில் அன்று கடமையாற்றியதன் காரணமாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கல்விமான்கள் உருவாகினார்கள் ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களின் வீடுகளுக்கு அருகாமையில் பாடசாலைகளை எதிர்பார்கிறார்கள் தூர இடங்களுக்குச் சென்று கடமையாற்ற மறுக்கிறார்கள் இந்த மனநிலை ஆசிரியர்களிடம் மாறவேண்டும் என கல்குடா வலயயக் கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

அன்று யாழ்பாணத்திலிருந்து வருகை தந்த ஆசிரியர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பல கிராமப்புறப் பாடசாலைகளிலும் கடமையாற்றினார்கள் ஆனால் இன்று எமது பிரதேச ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திலேயே கிராமப்புற பாடசாலைகளுக்கு செல்ல மறுக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

வரலாற்றில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை பண்ட் வாத்தியக் குழுக்களுக்கிடையில் போட்டி நிகழ்ச்சி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது இதில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்பற்று 2, கோறளைப்பற்று, வாகரை ஆகிய மூன்று கல்வி கோட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பாடசாலைகள் இந்த போட்டியில் பங்குபற்றியதில் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், செங்கலடி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணாகௌரி தினேஷ், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி, வேள்ட் விஷ்ன் கிரான் முகாமையாளர் எஸ்.பி.பிரேமசந்திரன்;, முறக்கொட்டாஞ்சேனை முகாம் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் தேவாலஹம, வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வ அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

'கல்குடா கல்வி வலயத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படுகிறது. கஷ்ட பிரதேசங்களில் 10 - 12 வருடங்கள் சேவையாற்றிய ஆசிரியர்கள் அவர்களது சொந்த இடங்களுக் இடமாற்றம் பெறமுடியாத நிலையிலிருந்தனர். நான் வலய கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்ற பின்பு அந்தநிலையை மாற்றியமைத்தேன். 18 ஆசிரியர்களை வாகரைப் பிரதேசத்திலிருந்து செங்கலடி, ஏறாவூர் மற்றும் கோறளைப் பற்றுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால் அவர்கள் இங்கு வந்துவிட்டார்கள். வாகரைப் பிரதேசத்தில் சுகவீனம் காரணமாக வரமுடியாது என்று மறுக்கின்ற நிலைமையயை இங்கு பார்க்கின்றோம். 

ஆசிரியர்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும் நாங்கள் மட்டும் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்க கூடாது எல்லோரும் இணைந்து இந்த கல்வி வலயத்தை தரம் உயர்த்துவதற்கு ஒத்துளைக்கவேண்டும். இங்குள்ள ஆசிரயர்களின் மன நிலை வித்தியாசமாகவுள்ளது.

நாங்கள் எல்லாம் இங்கு கல்விமான்களாக இருப்பதற்குக் காரணம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இங்கு கற்பித்த ஆசிரியர்கள்தான். யாழ்ப்பாணத்திலிருந்து தங்கள் குடும்பங்களை விட்டு பெட்டு படுக்கைகளுடன் மட்டக்களப்பு, திருகோணமலைக்கு வந்து தங்கியிருந்து அவர்கள் கல்வி கற்பித்தார்கள் அவர்கள் அன்று செய்த தியாகத்தினால்தான் இன்று நாங்கள் கல்விமான்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றோம்.

அவர்கள் உருவக்கிவிட்டு தங்களது பிரதேசத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட பல ஆசிரியர்கள் எங்களது பிரதேசங்களில் சேவையாற்றுவதற்கு மறுக்கிறார்கள். அன்று யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து சேவையாற்றுவதற்கு ஆசிரியர்கள் மறுத்திருந்தால் மட்டக்களப்பிலோ அல்லது திருகோணமலையிலே கற்ற ஒரு சமுதாயத்தை நாங்கள் கண்டிருக்க முடியாது.

அந்த மனநிலை அவர்களுக்கு வரவில்லை. ஆனால் இந்த மாவட்டத்திலே பிறந்து வளர்ந்த ஆசிரியர்கள் வாகரைப் பிரதேசத்துக்குச் செல்வதற்கு அஞ்சுகிறார்கள், வாழைச்சேனைக்கு செல்வதற்கு மறுக்கிறார்கள். இவ்வாறாயின் எமது நலை எங்கே என்பதை நாட ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களை கடமைகளை செய்ய வேண்டும் அதிபர்கள் நிருவாகத்தினைச் செய்ய வேண்டும் அவ்வாறு சேர்ந்து தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதன் மூலம் கல்குடா கல்வி வலயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :