விலங்குக்கு கூக்குரலிடும் பொதுபலசேனா : மனிதப் புதை குழி குறித்து மௌனம் காப்பது வேடிக்கையானது! -ஹனீபா மதனி



நமது நிருபர்-

லங்கையை மாணிக்க தீபம் என்று அழைப்பார்கள். நமது நாட்டில் தோண்டினால் மாணிக்க கற்கள்தான் கிடைத்து வந்தன. இது நம்முடைய தேசத்தின் சிறப்பம்பங்களில் ஒன்றாகும். ஆனால், இப்போது, நமது நாட்டில் தோண்டுகின்ற இடமெல்லாம் மனித எலும்புக் கூடுகளும், மண்டையோடுகளுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால் துரதிஷ்டவசமாக – உயிரினங்கள் மீது கருணை செலுத்த வேண்டுமெனக் கூறி, விலங்குகளின் இறைச்சியைப் புசிப்பதையே தடைசெய்ய வேண்டுமெனப் பிரசாரம் செய்து வரும் - பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள், மேற்படி மனித எலும்புக் கூடுகள் குறித்து பேசாமல் உள்ளமையானது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. 

இவ்வாறு, அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பணிப்பாளருமான அஷ்சேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று 'அபீபா' விளையாட்டுக் கழகத்தின் ஒரு வருட நிறைவினையொட்டி, அகில இலங்கை ரீதியாக இஸ்லாமிய உலமாக்களிடையே நடத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டமும் பரிசரிப்பு விழாவும் அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அஷ்ஷேய்க் ஹனீபா மதனி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்ளூ

'பல சமயத்தவர்கள் வாழும் இந்த நாட்டில், இஸ்லாமிய மார்க்கத்தைப் போதிப்பவர்களான உலமாக்கள் - கிறிக்கட் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவதானது மகிழ்ச்சிக்குரியதொரு விடயமாகும். இதன் மூலமாக உலமாக்களின் செயற்பாடுகள் விசாலமடைந்துள்ளதாகவே நான் காண்கிறேன்.

விளையாட்டுக்களையும், தேகப் பயிற்சிகளையும், அவை சார்ந்த விடயங்களையும் கற்றுக் கொள்ளுமாறு இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. உமர் (ரலி) அவர்கள் - இஸ்லாமிய வரலாற்றில் முன் மாதிரியான பல விடயங்களை உருவாக்கியவர் என்பது பற்றி நாம் அறிவோம். ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் - பெற்றோர்கள் சிலரிடம் 'உங்கள் குழந்தைகளுக்கு – நீச்சல், குறிபார்த்து அம்பெறிதல், குதிரையேற்றம் போன்றவற்றினைக் கற்றுக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளார்கள்.

எனவே, இஸ்லாமியப் பார்வையில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இஸ்லாம் என்பது எல்லா விடயங்கள் பற்றியும், எல்லாத்துறைகள் பற்றியும் பேசுகின்றது, போதனை செய்கிறது. உணவு முறை, உடை உடுத்தும் முறை, பொழுது போக்கு, கல்வியறிவு, மனித உறவு என்று அனைத்து விடயங்களிலுமுள்ள நன்மை தீமைகள் குறித்து அறிவுரை வழங்குகின்றது. அதுபோலவே, விளையாட்டுக்கள் குறித்தும் - இஸ்லாமிய பார்வையொன்று உள்ளது.

ஆனால், நமது நாட்டில் இஸ்லாம் குறித்து துளியளவும் அறிவற்ற பொதுபலசேனா போன்ற கூட்டத்தினர், நமது சமயத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றமையானது வருந்தத்தக்கதாகும்.

பொதுபலசேனா போன்ற அமைப்புக்களுக்கு இஸ்லாம் குறித்து மட்டுமல்ல, அவர்கள் பின்பற்றுவதாகக் கூறும் பௌத்த மதம் குறித்தும் போதிய அறிவு உள்ளனவா என்கிற சந்தேகம் நமக்கு எழுகிறது. அவர்களின் நடத்தைகள்தான் இவ்வாறான சந்தேகம் எழுகின்றமைக்குக் காரணமாகும்.

பொதுபலசேனா அமைப்பிலுள்ள பௌத்த சாமியார்கள் - பௌத்த தர்மத்திலுள்ள அன்பு, கருணை, காருண்யம் போன்வற்றினை தாம் பின்பற்றுவதாகவும், போதிப்பதாகவும் கூறிக் கொள்கின்றனர். உயிர்கொல்வதை தாம் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று சொல்கின்றார்கள். அதனால்தான், இறைச்சிக் கடைகளுக்கு எதிராகவும், மாசிசம் புசிப்பதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக பிரசாரம் செய்கின்றனர். 

ஆனால், இப்போதெல்லாம் நமது நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் தோண்டுமிடமெல்லாம் மனித எலும்புக் கூடுகளும், மண்டையோடுகளுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. எலும்புக் கூடுகளாக புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுகின்றவர்கள் - ஒரு காலத்தில் யாரோ ஒரு குழுவினரால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

இலங்கையை மாணிக்க தீபம் என்று அழைப்பார்கள். நமது நாட்டில் தோண்டினால் மாணிக்க கற்கள்தான் கிடைத்து வந்தன. இது நம்முடைய தேசத்தின் சிறப்பம்பங்களில் ஒன்றாகும். ஆனால், இப்போது, நமது நாட்டில் தோண்டுமிடமில்லாம் மனித எலும்புக் கூடுகளும், மண்டையோடுகளுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும், மனித எலும்புக் கூடுகள் இவ்வாறு மீட்கப்படுகின்றமை குறித்தும், அவ்வாறு மீட்கப்படும் எலும்புக் கூடுகளுக்குரியவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது குறித்தும் - மிருகங்களைக் கொல்வதையே சகித்துக்கொள்ள முடியாது எனக் கூறும் பொதுபலசேனா அமைப்பினர் பேசாமலிருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

உணவுக்காக மிருகங்களைக் கொல்வதையே ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறுகின்ற பொதுபலசேனா அமைப்பினர் - வடக்கிலும், தெற்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் பற்றியும், அதில் கொன்று புதைக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் ஏன் பேசவில்லை என்று யோசிக்கத் தொடங்கும்போது, பொதுபலசேனா அமைப்பினரின் இனவெறிப் போக்கினைப் புரிந்து கொள்ள முடியும்' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :