எஸ்.அஷ்ரப்கான்-
பொத்துவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம் இப்றாஹிமின் திடீர் மறைவு ஊடகத்துறையினருக்கு மட்டுமல்லாது முழு அம்பாரை மாவட்ட மக்களுக்கும் பேரிழப்பாகுமென திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மிக எளிமையான ஒருவராக மக்களிடம் தோழமையுடன் இவர் நடந்து கொண்டதுடன், பொத்துவில் பிரதேசம் மட்டுமல்லாது ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காகவும் பாகுபாடின்றி சேவையாற்றிய ஒருவராகவும் காணப்பட்டார்.
ஊடகத்துறையில் மட்டுமல்லாது அவர் தொழிலுக்காக சேவையாற்றிய பல அரச துறைகளிலும் நேர்மையாளராகவும், திறன்படவும், சேவை செய்து மக்களுக்காகவே தமது காலநேரத்தை செலவிட்டவர். இதனால் மக்களின் நன்மதிப்பையும் வென்றார்.
மக்கள் தேவைகளை, குறைகளையும் இனம்கண்டு தனது எழுத்துத்துறை என்ற பாரிய பேனாமுனையினால் வெளிக்கொண்டுவந்ததுடன் மக்கள் வேகனாகவும் சேவையாற்றிவந்தார். அதுமட்டுமல்லாமல் பொத்துவில் பிரதேச மாணவர்களின் பிரச்சினைகள், கல்வித்துறைசார் குறைபாடுகளையும் வெளிக்கொண்டுவந்ததனால் துறைசார்ந்த அதிகாரிகளின் ஊடாக தீர்வுகளைப்பெற்றுக்கொடுப்பதற்கும் இவரது ஊடகத்துறைப்பணி மிகவும் பிரயோசனமாக அமைந்திருந்தது.
இவர் தனது இறுதி ஊடகத்துறை சேவைக்காலத்தின்போது ஓய்வுபெற வேண்டிய வயது முதிர்ந்த காலத்திலும் சிறப்பாக சேவை செய்துவந்தார். இவை அனைத்தும் உண்மையில் அவரால் மக்களுக்கு செய்யப்பட்ட சேவை என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.
இவரது திடீர் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகசமூகத்தினருக்கும், பொத்துவில் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாருக்கு உயர்ந்த சுவரக்கம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment