பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும்தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இளையராஜாவின் மகனும் பிரபல தமிழ் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்துக்கு மாறியதாக செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் டெக்கான் க்ரோனிக்கல் எனும் ஆங்கில பத்திரிகைக்கு யுவன் பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார்.
மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார். தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment