டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்-
தற்பொழுது இலங்கை வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி விக்டரொவ் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதகரத்தின் மூன்றாவது செயலாளர் அன்ரே ஓ. மொஸ்க்வின் சகிதம் அமைச்சர் ஹக்கீமை வியாழக்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது.
மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ள ரஷ்ய நாட்டின் பிரதிநிதி அமைச்சர் ஹக்கீமிடம் இருந்து சில தெளிவுகளை பெற விரும்பினார்.
உரையாடலின் ஆரம்பத்தில் தமது இலங்கை விஜயத்தின் நோக்கத்தை பற்றிக் கூறிய அனடொலி டி. விக்டரொவ், ஐ. நா மனித உரிமை பேரவை சர்ச்சைக்குரிய நாடுகள் தொடர்பில் அவ்வப்போது மீளாய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கைக்கெதிராக கொண்டுவரப்படும் பிரேரணை வரைவில் குறிப்பாக யுத்தத்தின் இறுதிப் பகுதியோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்த்தின் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு பற்றியும். ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்ட பிரகாரம் அரசாங்கம் நடைமுறைப் படுத்த வேண்டிய அம்சங்கள் பற்றியும் வளியுறுத்தப்படலாம் எனத் தெரிவித்தார்.
யுத்தம் முடிந்து சில வருடங்களே கழிந்துள்ள நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதில் நியாயமில்லை எனக் கூறிய அவர், யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் அரசாங்கம் வடகிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதையிட்டு தமது நாடு பெரிதும் திருப்தியடைவதாகக் கூறினார்.
30 ஆண்டுகாலமாக நீடித்த யுத்தத்தின் பின்னர் நாடு பொருளாதார ரீதியிலும் துரித அபிவிருத்தி கண்டு வருவதை தாம் அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கும் பொழுது கூறியதாவது,
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் கரிசனையுடன் செயல்பட்டு வருகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் கையாண்டு வருகின்ற இவ்வேளையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்த கால சம்பவங்கள் தொடர்பில் உரியமுறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் காண்பதற்கு நம்பகமான உள்நாட்டு பொறிமுறை ஒன்றின் அவசியம் பற்றி பரவலாக பேசப்படுகின்றது.
யுத்த காலத்தில் அமுல் படுத்தப்பட்ட அவசரகால சட்டம் பின்னர் நீக்கப்பட்டு விட்டது. சகல இன மக்களும் புரிந்துணர்வோடு வாழக் கூடிய சூழ்நிலை நிலவுகின்றது. நாட்டின் மீது வெளிநாடுகள் சில எதிர்மறையாக செலுத்தும் பார்வை வெகுவாக அருகி வருகின்றது.
ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவது ஜெனீவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கெதிரான பிரேரணையின் பிரதான நோக்கங்களில் ஒன்றெனக் கூறப்படுகின்றது. பத்திரிகைச் சுதந்திரம் இயன்றவரை பேணப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தனித்துவமான ஓர் ஊடக கலாசாரம் உண்டு. அவதூறான விடயங்களை வெளியிடுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மீது தண்டனைக்குரிய குற்றஞ்சுமத்தும் சட்டம் நீக்கப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான சட்டம் எனது அமைச்சின் ஊடாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. காணாமல் போனோர் தொடர்பில் ஒரு பிரச்சினை இருந்து வருகின்றது. அதுபற்றி நாம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்படுவோர் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பதாக அவர்கள் பற்றிய ஒரு பத்திரம் (ரசீது) வழங்கப்படவுள்ளது. அவ்வாறு தடுத்து வைக்கப்படுவோரை உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும்.
இனங்கள் மீது குரோதத்தை உண்டுபண்ணக்கூடிய விதத்தில் வெறுப்பான பேச்சுக்களை கூறுவோருக்கு பாராதூரமான தண்டனை விதிக்கும் விதத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட விருக்கின்றது. நாட்டில் தேர்தல்கள் கால கிரமத்தில் ஜனநாயக ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றன.
மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.நான் முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியில் தலைமைப் பதவி வகிக்கிறேன். எமது கட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சியானாலும் எங்களுக்கு தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடமாகாண சபைக்கான தேர்தல் உரிய முறையில் நடாத்தப்பட்டு மக்கள் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதுவொரு திருப்பு முனையாக கருதப்படுகின்றது. யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பிருக்கவில்லை என்றார்.
0 comments :
Post a Comment