அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது பீச் பார்க் புனர்நிர்மாண திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்காக கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் சுமார் ஒரு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன் பிரகாரம் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு தெரிவாகியுள்ள ஒப்பந்தக்கார நிறுவனத்திடம் இவ்வேலைத் திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலை அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பீச் பார்க் பகுதிக்கு விஜயம் செய்து, புனர்நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து இவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் உள்ளிட்ட அதிகாரிகளும் பிரசன்னமாகி இருந்தனர்.
அதேவேளை நற்பிட்டிமுனை தமிழ் பிரிவில் வனவாச வீதி தொடக்கம் விவேகானந்தா வீதி வரையான பாதையையும் நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரிவில் மதீனா வீதி தொடக்கம் பூ மரத்தடி வீதி வரையான பாதையையும் கொங்க்ரீட் வீதிகளாக புனர்நிர்மாணம் செய்வதற்கான திட்டங்களும் இன்று ஒப்பந்தக்கார நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டன.
புறநெகும வேலைத் திட்டத்தின் கீழ் இவ்விரு வீதிகளுக்கும் முறையே சுமார் 36 லட்சம் ரூபாவும் 47 லட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment