டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் -
இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வடகிழக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழாய் நீர் வசதி போன்றவற்றுக்கு உதவுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மலேசிய உயர்ஸ்தானிகர் அஸ்மிசைய்னுதினிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அஸ்மி சைய்னுதின், நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கட்சியின் கொழும்பிலுள்ள ' தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் புதன் கிழமை (12) மாலை இடம்பெற்ற பொழுதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்களின் நலம் தொடர்பில் மலேசியா அரசாங்கம் செலுத்திவரும் அக்கறைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்ததோடு, நீதி மற்றும் சட்டம் சம்பந்தமான விடயங்களில் இரு நாடுகளுக்குமிடையில் பயனுள்ள கருத்து பறிமாற்றங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறும் முஸ்லிம்கள் இரு பிரிவினராக வகைபடுத்த பட்டுள்ளனரா என உயர்ஸ்தானிகர் கேள்வியெழுப்பிய பொழுது, அதற்கு பதிலளித்த அமைச்சர் அவ்வாறு முன்னர் கூறப்பட்டதாகவும் அரசாங்கத்திடம் அதைபற்றி சுற்றிகாட்டியதன் பயனாக அவ்விதமாக வேறுபடுத்தி கூறப்படுவது தவிர்க்கப்பட்டு வருவதாகவும் சொன்னார்.
இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை குறிப்பாக இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், ஆயினும் அதில் உள்வாங்கப்படும் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவானதென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இனவாத சக்திகள் சில பள்ளிவாசல்களின் மீது அவ்வப்பொழுது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் அவற்றை இயங்கச் செய்யலாமல் தடுப்பதற்கு அச்சக்திகள் கையாளும் வழிமுறைகள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
வடக்கில் மலேசிய தன்னார்வ தொண்டர் நிறுவனம் ஒன்று ஆற்றிய சேவைகளை அமைச்சர் பாராட்டினார். மருத்துவம் உடல்நலம் சார்ந்த ஒத்துழைப்பையும் சம்பந்தப்பட்ட மலேசிய நிறுவனம் வழங்கியதாக அப்பொழுது உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் பொஸ்வானாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்கள் மாநாட்டில் தாம் மலேசிய நீதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாட எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். வழக்கு தாமதங்களை வெகுவாக குறைப்பதற்கு மலேசிய நீதி அமைச்சு கையாண்டு வரும் நடைமுறை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதை பற்றியும் அமைச்சர் கூறினார்.
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment