அமெரிக்கா, இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவின் இடைவெளி பெரிதாகும் வாய்ப்பு


ஹரிகரன் -
மெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளி அண்மைக்காலத்தில் மிகவும் பெரிதாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2014ம் ஆண்டு பிறந்த பின்னர் தான் இந்த இடைவெளி பெரிதாகி வருகிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்கிய விரிசல் இப்போது ஒட்டுப்போட முடியாதளவுக்கு பெரிதாகியுள்ளது.

போரின் போது இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவையும் அமெரிக்கா வழங்கி வந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகவும் அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணங்கியிருந்தால் பிரபாகரனை அமெரிக்கா காப்பாற்றிக் கொண்டு போயிருக்கும் என்றும் அமைச்சர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

தனிப்பட்ட ரீதியாக பிரபாகரனைக் காப்பாற்றுவதில் அமெரிக்கா அக்கறை காட்டியதா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதில் அது உறுதியாக இருந்தது.

அதனால்தான் அதற்குத் தேவையான எல்லாப் பின்புல ஆதரவுகளையும் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கி வந்தது.

2002ல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னரே புலிகளை அழிப்பதற்கான அமெரிக்க வியூகமும் வகுக்கப்பட்டது.

அதற்கேற்றவாறு அரச படைகளை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் இராணுவ, கடற்படை, விமானப்படை உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து படையினரின் பலம், புலிகளின் பலம் என்பனவற்றை மதிப்பீடு செய்து அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தனர். மீண்டும் போர் வெடித்தால் புலிகளை முழுமையாகத் தோற்கடிப்பதற்காக தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட அறிக்கை அது.

அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் படி அரச படையினர் முழுமையாகச் செயற்பாடுகளை முன்னெடுக்காது போயிருந்தாலும் விடுதலைப்புலிகளை அழிப்பதில் அமெரிக்கா எந்தளவுக்கு உறுதியுடன் இருந்தது என்பதற்கு அதுவும் ஓர் உதாரணம்.

கடற்புலிகள் தான் விடுதலைப் புலிகளின் முதுகெலும்பு என்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்கா அவர்களை முடக்குவதற்காக கரேஜெஸ் என்ற தமது போர்க்கப்பலை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியது.

அது சமுத்தர என்ற பெயரில் இலங்கைக் கடற்படையில் சேர்க்கப்பட்டு ஆழ்கடல் கண்காணிப்புக்கும் கடற்புலிகளின் விநியோகத்தை முடக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி போர் நடந்துகொண்டு இருந்தபோது ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியதன் மூலம் அவற்றை மூழ்கடிப்பதற்கும் தேவையான உதவிகளை அமெரிக்காவே வழங்கியது.

போரின் கடைசிக் கட்டத்தில் ஆனந்தபுரம் சமரில் புலிகளின் கணிசமான பலம் தோற்கடிக்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தான் போரை நிறுத்த அமெரிக்கா கோரியது. அதுகூட புலிகளுக்கு ஒரு மீளுயிர் கொடுப்பதற்கான முயற்சியாக இருக்க முடியாது.

அது வலுவான அழுத்தமாக இருந்தால் புலிகளைப் பூண்டோடு அழிக்கும். அரசாங்கத்தின் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கும்.

அந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து போர்நிறுத்தம் செய்ய அரசாங்கம் இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம்.

போர் முடியும் வரை அரசாங்கத்துக்கு உறுதுணையாகவே இருந்த அமெரிக்கா போர் முடிந்த பின்னர்தான் நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்த ஆரம்பித்தது.

பொறுப்புக்கூறலை அமெரிக்கா வலியுறுத்த தொடங்கியதும் அரசாங்கத்துக்கு தலைவலி மட்டும் தொடங்கவில்லை. இருதரப்புக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இலேசான விரிசல்கள் ஏற்பட்டாலும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் தனது உறவுகளைப் பலமாகவே வைத்திருந்தது.

பசுபிக் கட்டளைப் பீடத்தின் மூலம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் போர் முறைசாராப் பயிற்சிகளில் இலங்கைப் படையினருடன் இணைந்து பங்கெடுத்தது. உதவிகளையும் வழங்கி வந்தது.

இப்போது பாதுகாப்புத் திணைக்களத்தின் உறவிலும் மெல்லிய விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

கடந்த மாதம் முதல் வாரத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் ஸடீபன் ராப் மேற்கொண்ட பயணம், அதன்போது அவர் வெளியிட்ட கருத்துகள், வடக்கில் அவரது பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட ருவிட்டர் பதிவு என்பன அண்மைய மோதல்களை உச்சத்துக்கு கொண்டு சென்றன.

ஜெனிவாவில் அடுத்த தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா தயாராகிவிட்ட தகவலை உறுதிப்படுத்திக் கொண்டதும் அமெரிக்காவைக் கண்டபடி விமர்சிக்கத் தொடங்கியது அரசாங்கம்.

குறிப்பாக அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் போன்றவர்கள் மீது அரசாங்கத்துக்கு குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களுக்கு கண்ணில் கூட காட்ட முடியாதளவுக்கு கோபம்.

மிச்சேல் ஜே சிசன், லெபனான் உள்ளிட்ட மோதல் சூழல் நிலவிய நாடுகளில் அமெரிக்காவின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் திறமையாகச் செயற்பட்டவர் என்று பெயரெடுத்தவர். அவரை ஒபாமா நிர்வாகம் கொழும்புக்கு அனுப்பிய போதே அவர் எவ்வாறு செயற்படுவார் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.

அந்தக் கணிப்பு தப்பிப் போகாத நிலையில் அவருடன் அரசாங்கம் முட்டிக்கொண்டது. இந்த இராஜதந்திர விரிசலை மேலும் பெரிதாக்கி விட்டது.

ஸ்டீபன் ராப்பை அடுத்து நிஷா பிஸ்வால் கொழும்பு வந்து வெளியிட்ட கருத்து அரசாங்கத்துக்கு பெரிதும் கொதிப்பை ஏற்படுத்தியது. அதற்குள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் கத்தரின் ருசெல் கொழும்புக்கு வரத் திட்டமிட்டிருந்தார்.

அடுத்தடுத்து அமெரிக்காவிலிருந்து வரத் தொடங்கிய அதிகாரிகளைப் பார்த்ததும் அரசாங்கம் கொஞ்சம் மிரண்டு போனது.

கடந்த மாதம் 27ம் திகதி அவர் இலங்கை அரசிடம் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அந்தக் கோரிக்கை 31ம் திகதி நிராகரிக்கப்பட்டது.

இது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கத்தரின் ருசெல்லின் பயணம் இம்மாதம் 10, 11ம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. அவர் ஒருநாள் யாழ்ப்பாணம் செல்லவும் திட்டமிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் செல்லும் அமெரிக்க அதிகாரிகள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோரைச் சந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அரசாங்கம் விரும்பவில்லை.

ஆனால் கத்தரின் ருசெல்லின் பயணத்துக்கும் ஜெனிவா தீர்மானத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே ஆச்சரியமான உண்மை.

அவர் உண்மையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவே திட்டமிட்டிருந்தார்.

தெற்காசியாவுக்கான பயணத்தை கடந்த 4ம் திகதி அவர் தொடங்கியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் அவரது பயண நோக்கத்தை தவறாகக் கணித்தோ அல்லது வேண்டுமென்றோ அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டது. அமெரிக்க உயர் அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல் சர்வதேச அளவில் பரவிய நிலையில் தாம் அவ்வாறு நிராகரிக்கவில்லை என்றது அரசாங்கம்.

கத்தரின் ருசெல் 10,11ம் திகதிகளில் கொழும்பில் சந்திக்க விரும்பிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்டோர் நாட்டில் இருக்கமாட்டார்கள் என்பதாலேயே அவரது பயணத்தை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

கத்தரின் ருசெல் இலங்கைக்கு தனியான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்காத நிலையில் அவரது பயணத் திகதியை மாற்றியமைக்க கோரியது அரசாங்கம்.

அவருக்கு தாம் விசா மறுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் விசா மறுக்கப்பட்டதால் தான் அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இதுவும் அமெரிக்க இலங்கை உறவில் மற்றொரு நெருடலை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் துணுக்காய் மகளிர் பாடசாலை, உருத்திரபுரம் மகா வித்தியாலயம், முசலி மகா வித்தியாலயம் ஆகியவற்றை முழுமையான வசதிகள் கொண்ட பாடசாலைகளாகப் புனரமைப்பதற்கு அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடம் முன்வைத்த திட்டத்தை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

பசுபிக் கட்டளைப் பீடமே சுனாமியின் போது உடனடியாக உதவிக்கு விரைந்து வந்தது. போருக்குப் பின்னர் பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை புனரமைத்துக் கொடுத்தது.

இப்போது பசுபிக் கட்டளைப்பீடத்தின் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளதன் மூலம் இதுவரை இராஜாங்கத் திணைக்களத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மட்டுமே நிலவிவந்த முறுகல் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் விரிவடைந்துள்ளது.

இந்த விரிசல் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கலாம்.

குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்புச் சார்ந்த உதவிகளை இன்னமும் பெற்று வரும் இலங்கை அத்தகைய உதவிகளை இழக்கும் நிலை தோன்றலாம்.

அதுமட்டுமன்றி இந்த விரிசலை மேலும் விரிவாக்க இலங்கை முனையுமானால் அது லிபியா, ஈராக் போன்ற நாடுகள் பயணித்த பாதையில் தான் இலங்கையைக் கொண்டுபோய் நிறுத்தும்.

அத்தகையதொரு பாதை எந்தளவுக்கு துயரமிக்க விளைவுகளை அந்த நாடுகளுக்கு கொடுத்தது என்ற வரலாற்றை அரசாங்கம் அவ்வளவு இலகுவாக மறந்து போய் இருக்காது என்றே நம்பலாம்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :