கல்முனை தரவை பிள்ளையார் கோயில் வீதியின் பெயரை மாற்றுவதற்கு மாநகர சபை நிர்வாகம் முயற்சிப்பதாகத் தெரிவித்து, கல்முனையில் இன்று அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் பெயரை கடற்கரை பள்ளிவாசல் வீதியாக பெயர்மாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த வீதியின் பெயர் மாற்றப்பட்டால், அது இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கலாம் என அமைதிப் பேரணியில் கலந்துகொண்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
தரவைப் பிள்ளையார் கோவில் வீதியின் பெயரை மாற்றும் திட்டத்திற்கு மதத் தலைவர்களும் அதிருப்தி வெளியிடுகின்றனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவர்கள் கல்முனை மாநகர சபை முதல்வர் நிசாம் காரியப்பர், கல்முனை தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஆகியோரிடம் மகஜர்களை கையளித்துள்ளனர்.
கல்முனை பிரதேச மக்கள் சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரிடம் வினவியபோது, உரிய தரப்பினரிடம் இதற்கான விளக்கத்தை அளிப்பதற்கு தாம் தயார் என அவர் கூறினார்.
எனினும், ஊடகங்களுக்கு நேரடியாக இதுகுறித்த தகவல்களை வெளியிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment