தனிப்பட்ட கோபதாபங்களுக்காகவும் அரசியல் சுய இலாபங்களுக்காகவும் தாய் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுப்பதானது எதிரிகளின் முன்னால் தனது தாயை நிர்வாணப்படுத்துவதற்கு சமன். எனவே நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பொதுவான விடயங்களுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீதோ அல்லது இந்த அரசாங்கத்தின் மீதோ உள்ள தனிப்பட்ட கோபங்களுக்காக இலங்கை பற்றிய தேவையற்ற விடயங்களை எவராவது வழங்குவாரானால் அதனால் ஏற்படும் பாதிப்பு ஜனாதிபதிக்கோ இந்த அரசாங்கத்துக்கோ மாத்திரமல்ல மாறாக இந்த நாட்டுக்கே பாதிப்பு.
எனவே, இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதற்காக சர்வதேசத்திற்கு அரசைப் பற்றி தகவல் வழங்குவது உகந்ததல்ல.
மாகாண சபை மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதை தற்போது காண முடிகின்றது. வட மாகாண சபை தேர்தல் முடிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைத்துள்ளது. இருந்தபோதும் தமிழர்களது பிரச்சினை தீர்ந்தபாடில்லை. எனவே இந்த யதார்த்த நிலையினை அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பினரும் உணர வேண்டும். எனவே, மாகாண சபை முறைமையை விட வேறு நல்ல முறைமையினை ஏற்படுத்த வேண்டும்.
வட மாகாண மக்களில் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அம்மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று இலங்கைப் பிரச்சினைகள் என்ற வகையில் தமிழ், சிங்களம் என்ற இன வேறுபாடுகளை மறந்து தாய் நாட்டை நேசிக்க வேண்டும்.
மனித உரிமைகள் பிரச்சினையினை மேற்குலகம் தமது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது. மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற சர்வதேச நாடுகள் புலிகள் இயக்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில்லை. எனவே அவர்களது சுயாதீனமற்ற செயற்பாட்டினை நன்றாக அறிய முடிகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றினைக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் பிரேரணையால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கையர்களான நம் அனைவருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே இந்தத் தருணத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
அரசாங்கமும் இவ்வாறான சர்வதேச அழுத்தங்கள் நாட்டுக்கு வராத வகையிலான வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் தேவையற்ற வகையில் எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடாது.
சில மேற்குலக நாடுகள் தங்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எமது நாட்டுக்குள் காலூன்றுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எனவே அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் வழிசமைத்துவிடக் கூடாது. மனித உரிமை என்ற போர்வையில் அவர்கள் எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுகிறார்கள். அதன் பாரதூரத்தை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டைப் பீடித்திருந்த யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தில் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அவ்வாறானதொரு நிலைமை தற்போது இல்லை. எனவே அந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டுமொரு யுத்தத்திற்கோ, பிரிவினை வாதத்திற்கோ இடமளிக்கக் கூடாது. அரசாங்கமும் இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
0 comments :
Post a Comment