சுருக்கு வலை மூலம் மீன் பிடித்தது குறித்து புகார் செய்ததால் நடுக்கடலில் மீனவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களின் உறவினர்கள் மீன்வள துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
சென்னை அடுத்த பெரிய நீலாங்கரை குப்பம், ஈஞ்சம்பாக்கம் மீனவ கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் 4 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக அரசு தடை செய்துள்ள சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக, சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் நீலாங்கரையிலுள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று ஜூலியட் எட்வர்டிடம் புகார் செய்து, அவரை கடலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் சோதனை நடத்தியபோது, சுருக்கு வலை மூலம் மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து படகு, வலை, மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, மீன் பிடித்தவர்களுக்கும், புகார் செய்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜூலியட் எட்வர்டு சமாதானம் செய்து வைத்தார். கரைக்கு வந்ததும் பறிமுதல் செய்யப்பட்ட படகு, வலை, மீன்களை அவர்களிடமே ஒப்படைத்தார்.
இதை கேள்விப்பட்டதும் மோதலில் காயமடைந்த 4 பேரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நீலாங்கரை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.
தகவலறிந்து வந்த நீலாங்கரை உதவி கமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment