-எம்.வை.அமீர்-
கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர் மாற்றம் தொடர்பாக அண்மையில் கல்முனை மாநகரசபையில் மேற்கோள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் பின்னர் இந்த பெயர் மாற்றம் சம்மந்தமாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்து சம்மந்தமாகவும் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) தலைவர் முபாறக் மௌலவியிடம் வினவிய போது அவர் பின்வருமாறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர் மாற்றம் விடயத்தை கல்முனை மேயர் அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்ததையும் இது விடயத்தை முற்றாக நிறுத்தும்படி கல்முனை முஸ்லிம்களை ஆலோசிக்காமல் ரஊப் ஹக்கீம் கட்டளையிட்டுள்ளமையையும் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக அதன் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது:
கல்முனை தரவைக்கோயில் வீதி என அழைக்கப்படும் வீதியில் நூறு வீதம் முஸ்லம்களே வாழ்கின்றனர். இந்த நிலையில் இவ்வீதியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற முஸ்லிம் மக்களின் அபிலாசையில் உள்ள நியாயத்தை யாரும் குறை கூற முடியாது. அதே போல் பல வருடங்களாக இருக்கும் பெயரை மாற்ற முடியாது என்ற தமிழ் மக்களின் வாதத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆனாலும் இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் இணைந்து நல்லதோர் புரிந்துணர்வுக்கு வந்திருக்க முடியும். இதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க நாம் முயற்சி செய்தோம். ஆனால் தவளை தனது வாயால் கெட்டது போன்று கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் தனது அரசியல் செல்வாக்கை காட்டுவதற்காக இது விடயத்தை மாநகர சபைக்கு கொண்டு வந்ததன் மூலம் சொல்லால் தீர்க்க முடியுமான விடயத்தை பொல்லால்; போட்டு தாக்கியுள்ளார். இதன் மூலம் நிசாம் காரியப்பருக்கு அரசியல் சாணக்கியம் என்பது அறவே கிடையாது என்பது புலனாகியுள்ளது.
இரண்டு கெபினட் அமைச்சுக்களைக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்களைக்கொண்ட அக்கட்சி இது விடயத்தை மிக இலகுவாக ஜனாதிபதி மூலம் சாதித்திருக்க முடியும். ஆனால் தமிழ் முஸ்லிம் இனவாதத்தை கிளப்பியே தேர்தலில் வெல்வதை கொள்கையாகக்கொண்ட இவர்கள் இந்த வீதியையும் பிரச்சினையாக்கி அர்த்தமற்ற இனவாதங்களை உருவாக்கியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கெதிராகவும்,கல்முனைக்குடி,சாய்ந்தமருது என பிரதேச வாதமும் கக்கியுமே கல்முனை தேர்தல்களில் வெல்லும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மேயரின் பெயர் மாற்ற விருப்பத்தை தமிழ் மக்கள் கொஞ்சமும் அனுமதிக்கமாட்டார்கள் என்பது கூட இவர்களுக்கு தெரியாதா? அல்லது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே இன மோதல்களை உருவாக்கி வாக்கு வங்கியை அதிகரிக்க மேயரும் அவர்சகபாடிகளும் இதனை மேற்கொண்டனரா?
மேற்படி வீதி விடயத்தை மாநகர சபையில் விவாதிக்க வேண்டாம் என மு. கா தலைவர் கல்முனை மேயருக்கு கட்டளையிட்டிருப்பதன் மூலம் நிசாம் காரியப்பர் அவசரப்பட்டு அனைத்தையும் கெடுத்து விட்டார் என்பதே அர்த்தமாகியுள்ளது. அத்துடன் மேற்படி வீதி விடயத்தில் கல்முனை முஸ்லிம்களின் ஆலோசனைகளை பெறாமல் பாராளுமன்ற உறப்பினர் பொன் செல்வராசாவின் வேண்டுகோளுக்கு அடிபணிந்து இதனை உடனடியாக நிறுத்தும்படி ஹக்கீம் கோரியுள்ளமை கல்முனை முஸ்லிம்கள் பற்றிய அவரது அக்கறையின்மையை காட்டுகிறது.
எம்மைப்பொறுத்தவரை கல்முனை மாநகர ஆட்சியிலிருந்து முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம்கள் ஒதுக்கி விட்டு கல்முனையை தலைமையாகக்கொண்ட கட்சியுடன் இணைந்து முஸ்லிம் தமிழ் இணைந்த மாநகர ஆட்சியொன்றின் மூலமே இது போன்ற பிரச்சினைகளை பரஸ்பர பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும். இதனை விடுத்து இனவாதத்தை அடித்தளமாக கொண்ட முஸ்லிம் காங்கிரசாலோ அதன் கல்முனை மேயர் நிசாம் காரியப்பராலோ இதனை ஒரு போதும் தீர்க்க முடியாது.
0 comments :
Post a Comment