மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பள்ளிவாசல் நிருவாகசபையினரை தவிர்ந்த ஏனையோர்கள் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் மூக்கை நுழைப்பதானது நாட்டில் முஸ்லிம்களின் இருப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது தேசிய பிரச்சினை மட்டுமல்ல. சர்வதேச ரீதியிலும் இன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் குறித்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பள்ளிவாசலுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், இதற்கான தீர்வொன்றை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதனையொட்டி அரசாங்கத்தில் உள்ள 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் உள்ள முக்கிய பங்காளிகளான முஸ்லிம் கட்சிகள் தான் இவ்விவகாரத்திற்கு முழுப்பொறுப்பு கூற வேண்டியவர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசலின் இருப்பை பாதுகாக்க வேண்டும். சிரேஸ்ட அமைச்சர் பௌஸி மற்றும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லாஹ் ஆகியோர் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் சரியானதொரு முடிவினை எடுக்க வேண்டும்.
இன்று தம்புள்ளை புனித பிரதேசம் என கூறி இனாமலுவ தேரர் அப்பள்ளியை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றார். அவரின் கோரிக்கைக்கிணங்க பள்ளிவாசலை அகற்றினால் நட்டில் இன்னும் பல பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு நாமே அங்கீகாரம் கொடுத்தது போலாகிவிடும்.
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இடம்தர முடியாது என உறுதியான நிலைப்பாட்டில் பள்ளிவாசல் நிருவாக சபையினர் இருக்கின்றனர். அவர்களின் முடிவை நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்.
இனவாதிகளின் அபிலாசைகளை அரசாங்கம் நிறைவேற்றும் நோக்கில் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவதானால் அவர்களே செய்துகொள்ளட்டும். ஆனால் முஸ்லிம் தரப்பு இவ்விவகாரத்தில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் நாட்டில் பரவலாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். எதிர்கால சந்ததியினரும் கௌரவமாக வாழவேண்டியுள்ளது.
இன்று நாம் விட்டுக்கொடுத்துவிட்டு சென்றால் நாளை எமது சந்ததியினருக்கு இந்நாட்டில் முஸ்லிம்கள் என்ற காரணத்தால் உரிமைகள் மறுக்கப்படும். முஸ்லிம்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள், போராடியவர்கள். இந்நாட்டில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்கள். தேசியரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்காளிகளாவர். இந்நிலையில் நாட்டில் முஸ்லிம்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு.
இந்த அரசாங்கத்தினால் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை உட்பட ஏனைய பள்ளிவாசல்கள், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பல செயற்பாடுகளை தடுக்க முடியாதுள்ளது. விரைவில் இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்படும். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் விரைவில் ஏற்படுத்தப்படும். இதன்போது நாம் முன்னின்று சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களின் அபிலாசைக்கு ஏற்றவாறு பிரச்சினைகளை தீர்த்துவைப்போம்.
தற்போது அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும் இணைந்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வர வேண்டும். அரசியல் அந்தஸ்தற்ற தனிப்பட்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிடுவது பொருத்தமானதல்ல. எதிர்கால இருப்பை கருத்திற்கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment