இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் அளுத்கமயில் பொதுபலசேனா நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் தடைவிதிக்காமல் இருப்பது ஏன் என மேல்மாகாணசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் பௌத்த பிக்கு ஒருவர் பயணித்த வாகன சாரதிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலையை திருபுபடுத்தி முஸ்லிம் சிங்கள கலவரமாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் ஊடகப்பேச்சாளர் டிலந்த விதானகேயை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் செய்தியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் அரசின் ஆசிர்வாதத்துடனேயே பொதுபலசேனாவின் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாகவும், அரசிற்கு நாட்டில் வன்முறையொன்றை உருவாக்கி அரசியல் நடத்தும் தேவை இருப்பதாக தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்றைய தினம் அளுத்கம நகரில் பொதுபலசேனாவினர் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தவிருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட அசம்பாவிதத்தை மையப்படுத்திய இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவிருக்கின்றது. இருவருக்கிடையில் இடம்பெற்ற முறுகலை, கொண்டு இரு சமூகத்திற்குமிடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் பொதுபலசேனாவினர் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இன முறுகலுக்கு வழிவகுக்க முயற்சிக்கும் இச்செயற்பாட்டை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்களும் தொழிற்சங்கங்களும் நடத்தும் போராட்டங்களை நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு தடை செய்கின்றது. எனினும், இன முறுகலை ஏற்படுத்தும் பொதுபலசேனாவின் இச்செயற்பாடுகளை அரசு கட்டுப்படுத்தாமல் இருக்கின்றது.
பொதுபலசேனா, முஸ்லிம் விரோதப்போக்கினை அப்பாவி சிங்கள மக்களின் மனதில் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் ஒரு சமூகம் ஒடுக்கப்படுகின்றது. எனவே, இதனை கட்டுப்படுத்தவேண்டிய உடனடித் தேவை இருக்கின்றது. இதனை அரசு செய்யாவிடின் நாட்டில் பெரும் அச்சுறுத்தலான நிலைமை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இவ்விடயத்தில் இப்போது செயற்படாமல் இருக்கும் நிலையில், இதன்மூலம் பின்னர் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த இழப்புகளை அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment