அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போர் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்கும் தரப்பினர் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஓர் பாரதூரமான நிலைமை எனவும் சாட்சியமளிப்போர் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் புலம்பெயர் சமூகம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் பிழையாக அர்த்தப்படுத்தப்பட இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டது எனவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டும் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஈடுபடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment