வடக்கின் வசந்தம்,கிழக்கின் உதயம் ஆகியவற்றால் மக்கள் மனதை வெல்ல முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கண்டி தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் 'செய்யவேண்டியது என்ன' என்ற தலைப்பில் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
1956 ஆம் ஆண்டு மற்றும் 2005 ஆம் ஆண்டு காலப் பகுதிகள் இரண்டில் மட்டும் தான் பொது மக்கள் கட்டி எழுப்பிய அபிப்பிராயம் ஒன்றை முன்வைத்து தேர்தல் முன்னெடுக்கப்பட்டு அதில் வெற்றி ஈட்டப்பட்டது.
1956 இல் பாரிய சமூக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டிய ஆதங்கம் ஏற்பட்ட காலத்தில் அதனை நிறைவேற்ற முற்பட்ட கட்சி வெற்றி பெற்றது.
அதே போல் 2005 ஆம் ஆண்டும் ஓற்றை ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற அபிப்பிராயம் நிலவிய காலம். அதே போல இன்றும் மாற்றம் ஒன்று தேவை என அபிப்பிராயங்கள் முன்வைக்கப் படும் காலம். எனவே எத்தகைய மாற்றம் தேவை என்பதை நாம் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.
தற்போதைய அரசு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்துள்ளது. துறை முகங்களை அபிவிருத்தி செய்துள்ளது அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. ஆனால் கிராமத்து உற்பத்திகள் நகருக்கு வந்து சேர்வதாக இல்லை.
வடமாகாணத்திற்கு வடக்கின் வசந்தமும் கிழக்கு மாகாணத்திற்கு கிழக்கின் உதயமும் வழங்கப்பட்டாலும் அங்குள்ள வாக்குகள் அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை. பொது மக்கள் மனதை வெல்லும் விடயங்களைச் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
நவீன இலங்கையின் அரசியல் தந்தையான ஜே.ஆர்.ஜெயவர்தன திட்டமிட்ட யாப்பு இன்றைய அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாக உள்ளது. எனவே அவர்தான் இன்றைய அரசியலில் தந்தையாக உள்ளார். அவரது யாப்பின் படி அமைச்சரவை ஒவ்வொரு நாளும் விரிந்து கொண்டே போகிறது.
அவ்வாறு விரிந்து கொண்டு போவதைத் தடுக்க முடியாது. ஏனெனில் பலரைத் திருப்திப் படுத்த வேண்டும்.
இனவாதிகளுக்கு இலஞ்சமாக அமைச்சர் பதவிவழங்கும் யாப்பை ஜே.ஆர்.ஜெயவர்தனாவே அறிமுகப் படுத்தினார். ஜனாதிபதியாக ஆட்சியில் இருப்பவர் பெரும் பான்மையை தக்கவைக்க என்ன விலை கொடுத்தாவது அங்கத்தவர்களை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகுகிறார்.
ஐ.தே.க.வில் ஒழுங்கான திறமையான கடைசி அங்கத்தவரையும் வாங்கிவிட்டனர். இனி வாங்க யாரும் இல்லை. ஆனால் இனி அரசில் உள்ளவர்களை எதிரணிக்கு வாங்கும் காலம் வரும்.
இவை அனைத்தும் தற்போதை ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச ரீதியில் மேற்குலகு கொண்டு வந்துள்ள திட்டங்களாகும். எனவே எமது யுத்த வீரர்கள் செய்த தியாகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் மேற்குலகின் சதிக்கு இடமளிக்க முடியாது.
ஆனால் ஆட்சியாளர்களின் குறைகளைத் திருத்து வதன் மூலம் எமது இறைமையையும் நாட்டையும் எதிர்காலச்சந்ததிகளையும் பாதுகாக்கலாம். இதற்காக அரசை நல்வழிப் படுத்தும் போராட்டம் ஒன்றே தேவை. ஆனால் இதை வைத்து ஐ.தே.க. வுக்கு நாட்டை தாரை வார்க்க முடியாது என்றார்.
-வீ-
0 comments :
Post a Comment