எமது மக்களுக்கான விடிவை நோக்கிய நகர்வினை எப்போதும் மேற்கொள்வோம்-பிரசன்னா




த.நவோஜ்-

மது ஆயுதப் போராட்டம் இன்று இந்த அரசாங்கத்தினால் மௌனிக்கப்பட்டிருந்தாலும், எமது மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியான போராட்டத்தின் மூலம் எமது மக்களுக்கான விடிவை நோக்கிய நகர்வினை எப்போதும் அயராது மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தினால் சசிகலா ஞாபகார்த்த சாவல் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் கழக தலைவர் வி.சுவேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொழிலதிபர் எஸ்.ஸ்ரீமயன், சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.நவநேசராஜா, உதைபந்தாட்ட கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

முன்னொரு காலத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டம் உதைபந்தாட்ட விளையாட்டில் முதன்மை பெற்று விளங்கியது. ஆனால் தற்போது இந்த உதைபந்தாட்டமானது அருகிக்கொண்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்றமை மனதுக்கு வேதனை அளித்தாலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது இவ் உதைபந்தாட்டம் இம் மண்ணில் இன்னும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றமை மகிழ்வடையச் செய்கின்றது.

மேற்படியான விளையாட்டுகள் மனித வாழ்வில் மிகவும் முக்கிய அம்சத்தினை வகித்து வருகின்றது. விளையாட்டின் மூலம் தான் மனிதருக்கிடையில் சகோதரத்துவப் பண்பும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் தோற்றம் பெருகின்றது. அது மட்டுமல்லாது மனிதன் தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் இவ்விளையாட்டுக்கள் துணைபுரிகின்றன.

தற்போதைய காலகட்டத்தில் இவ்வாறான விளையாட்டு மற்றும் கல்வி மூலம் தான் எமது இனம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடையும். எமது அடுத்தகட்ட போராட்டமும் இவற்றைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே நாம் எமது இளைஞர் சிறுவர்களை கல்வி மற்றும் விளையாட்டு ரீதியில் ஊக்கம் கொடுத்து அவர்கள் மட்டுமல்லாது எமது சமூகமும் எமது இனமும் மீளெழுவதற்கு ஒவ்வொரு தமிழ் பிரஜைகளும் போராட வேண்டியவர்களாக தற்காலத்தில் இருக்கின்றோம்.

அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்கள் விட்ட தவறினை முஸ்லிம் மக்கள் விடக் கூடாது என்று. கடந்த காலங்களில் அளுத்கமை, தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.

ஒரு சகோதர சிறுபாண்மை இனம் இவ்வாறு பேரினவாத அரசாங்கத்தின் சதிச் செயலினால் பொருளாதாரம் மற்றும் மத ரீதியாக தாக்கப்படுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் ஒரு போதும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இது போலவே எந்த இனத்திற்கும் அநீதி இடம்பெற்றாலும் அந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கும்.

இவ்வாறு தமிழர்களாகிய நாமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளும் இருக்கின்றது. ஆனால் கடந்த 2009ம் ஆண்டு தமிழர்கள் வாழ்வில் பேரழிவும், பேரின அழிப்பும் இடம்பெற்று எமது ஆயுத ரீதியான தேசிய விடுதலைப் போராட்டம் மௌனித்த சந்தர்ப்பத்தில் பட்டாசு கொழுத்தியும், பாற்சோறு கொடுத்தவர்களில் எமது சிறுபாண்மை சகோதர இனத்தாருக்கும் பங்கு உண்டு என்பதற்கு கடந்த கால வரலாறுகளே சான்றாகும்.

எமது வரலாறுகளை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் தவறுவிடவில்லை ஏமாற்றப்பட்டதாகவே வரலாறு சொல்லும். எமது தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரைக்கும் தமிழர்கள் வாழ்வில் ஏமாற்றம் தான் இருந்து வருகின்றது.

தந்தை செல்வா அவர்கள் மகாத்மா காந்தியை விட மேலானவர் என்றே கூறவேண்டும். ஏனெனில் மகாத்மா அவர்கள் நேரடியான வெளிப்படையான வெள்ளையர்களுடன் தான் போராடி விடுதலை பெற்றுக் கொடுத்தார். ஆனால் தந்தை செல்வா அவர்கள் நேர்மையற்ற இனவாத சக்திகளுடன் போராடி பொறுமை காத்தார். அதனால் தான் அவரால் விடுதலை பெற்றுக் கொடுக்க முடியாமல் எமது இனம் ஆயுத ரீதியில் போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.

இங்கு ஒன்று குறிப்பிட வேண்டி இருக்கின்றது 'ஏமாறுவது தவறல்ல ஏமாற்றுவது தான் தவறு' அந்த வகையில் தமிழர்களாகிய நாம் தவறு விட்டவர்கள் அல்ல தவறவிடப்பட்டவர்கள். இப்போதும் ஒரு உரிமையற்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது விடுதலைப் போராட்டம் இன்று சர்வதேசத்தின் கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை எதிர்கொள்ள முடியால் இந்த பேரினவாத இலங்கை அரசாங்கம் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. வெகுவிரைவில் எமது போராட்டத்திற்கான தீர்வு கிட்டும், எமது ஆயுதப் போராட்டம் இன்று இந்த அரசாங்கத்தினால் மௌனிக்கப்பட்டிருந்தாலும் எமது மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியான போராட்டத்தின் மூலம் எமது மக்களுக்கான விடிவை நோக்கிய நகர்வினை எப்போதும் அயராது மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :