சாய்ந்தமருது கரைவாகுப்பற்றில் அமைந்துள்ள குடாக்கரை-விவசாயம் செய்ய கோரிக்கை


எஸ்.அஷ்ரப்கான் -
சாய்ந்தமருது கரைவாகுப்பற்றில் அமைந்துள்ள குடாக்கரை கிழல் கண்டம் என்று அழைக்கப்படும் பல வருடங்களாக விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்டுள்ள தாழ் நிலக் காணிகளில் சிறுபயிர்களைச் செய்வதற்கும், கால் நடைகளை வளர்ப்பதற்கும் காணி உரிமையாளர்களுக்கு உரிய அமைச்சின் ஊடாக அனுமதியைப் பெற்றுத்தரும்படி கோரி சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தினால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது விடயமாக அமைப்பின்  ஸ்தாபகத் தலைவர் தேசமான்ய எம்.ஐ.எம்.அன்சார், செயலாளர் ஏ.ஆர். அஸ்பாக் அஹமட்  ஆகியோரால் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2004.12.26 இல் ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் அம்பாரை மாவட்டத்தின், கல்முனை மாநகர பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழ்ந்த சுமார் 1000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.

 சுனாமியினால் வீடு வாசல்களை இழந்து அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்து குடியமர்த்துவதற்காக சாய்ந்தமருது கரைவாகுப்பற்றில் அமைந்துள்ள குடாக்கரை கிழல் கண்டம் என்றழைக்கப்படும் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்ட தாழ் நிலக்காணிகள் 200 ஏக்கர் இனம் காணப்பட்டதன் பின் நில அளவை செய்யப்பட்டு அதில் 50 ஏக்கர் சட்டப்படி சுவிகரீக்கப்பட்டு அவைகள் வீடுகள் அமைப்பதற்கு உகந்த நிலமாக சீர் செய்யப்பட்டதன் பிற்பாடு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் 589 வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் 4 பேஜஸ்களைக் கொண்ட காணித்துண்டுக்குள் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு 'பொலிவேரியன்' கிராமம் எனப்பெயர் சூட்டப்பட்டது. இதில் குடியமர்த்தப்பட்டவர்களில் அதிகமானோர் கடற்றொழில் செய்பவர்களும் அத்துடன் விவசாயிகளும், கூலித்தொழில் செய்பவர்களுமாவர்.
 
இக்கிராமத்திற்கு அண்டிய பகுதியில் மிகுதியாக இருக்கும் குடாக்கரை கிழல் கண்டத்திற்குரிய 150 ஏக்கர் தாழ் நில காணிகளில் முறையான நீர்ப்பாய்ச்சல், வடிச்சல் இல்லாததினாலும் இக்காணிகள் அதிக சதுப்பு நிலமாகவும், களி கூடியதாக காணப்படுவதனாலும், விவசாயிகள் எதிர்பார்க்கும் கூடிய விளைச்சல் இன்மையாலும் இக்காணிகளில் விவசாயம்  செய்வது பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ளதாகவே காணப்படுகின்றது.
தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 26710 பேர் வசித்து வருவதுடன் 17583 வாக்காளர்களைக் கொண்ட சன அடர்த்திமிக்க ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. தற்போது இப்பிரதேச மக்கள் எஞ்சியுள்ள 150 ஏக்கர் தாழ் நிலக்காணிகளில் 2000 காணித்துண்டுகளுக்கு (2000 பேர்) உரித்துடையவர்களாக இருக்கின்றனர்.  இருப்பினும் இக்காணித்துண்டுகள்   எதுவித பிரயோசனமற்ற வெற்றுக்காணிகளாகவே உள்ளன. அத்துடன் சுனாமிகுடியேற்ற வீடுகள் 4 பேஜஸ்களுக்குள் அமைந்துள்ளதால் அதில்  சிறுபயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிகமான காணி உரிமையாளர்கள் இக்காணிகளில் சிறுபயிர்களைச் செய்வதற்கும் கால் நடை வளர்ப்பதற்குமான ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். இத்தாழ் நிலக்காணிகளை சிறுபயிர்ச்செய்கைக்கு உகந்ததாக மண்போட்டு சீரமைப்பதற்கு உரிய அமைச்சின் அனுமதியினையும் பெறவேண்டியுள்ளது. 2009.10.31ம் திகதி முன்னாள் விவசாய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிரிசேன அவர்கள் சாய்ந்தமருது கமநல சேவை மத்திய நிலைய திறப்பு விழாவின்போது இத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியளித்த விடயத்தினையும் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றோம். மேலும், திவிநெகும திட்டத்தின்கீழ் சிறு பயிர்களைச் செய்வதன் மூலம் ஜீவனோபாயத்திற்கு பயனுள்ளதாக இருக்குமென்றும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையமுடியும் என்றும் அதேபோல் கால் நடைவளர்ப்பின்போதும் ஆதாயம் பெறமுடியும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
 
தற்போது கடற்றொழிலும்,விவசாயமும் மந்தமான நிலையிலுள்ளதனால் விவசாயம் செய்வதற்கு கைவிடப்பட்ட தாழ்நிலக் காணிகளில் சிறுபயிர்ச்செய்கை மூலமும்,கால்நடைகள் வளர்ப்பத்தன் மூலமும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பது சம்பந்தமாக தங்களின் கவனத்தை செலுத்தி தாழ்நில காணிகளில் சிறுபயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பதற்கான அனுமதியினை உரிய அமைச்சினூடாக பெற்றுத்தரும்படி சாய்ந்தமருது  கரைவாகுப்பற்று காணி உரிமையாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :