செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே.

بسم الله الرمن الرحيم
அல்-ஹதீஸ் விளக்கவுரை
அரபி மூலம் : கலாநிதி ரீம் அப்துல் முஹ்சின் அஸ்-சுவைலம்
தமிழாக்கம் : முனாப் நுபார்தீன்

செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே.

ஹப்ஸாவின் தந்தை விசுவாசிகளின் தலைவர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் :செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே. எனவே நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியது உண்டு. எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தேயாகும். இன்னும் எவன் ஒருவனுடைய ஹிஜ்ரத் உலக நன்மையை அடைவதற்காகவோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ என்றிருந்தால் அவனது ஹிஜ்ரத்தானது – அவன் எதற்காக ஹிஜ்ரத் செய்தானோ அதற்காகவே ஆகும்! (நூல்: புகாரி, முஸ்லிம்)

விளக்கவுரை:
அஃமால் (செயல்கள்) எனும் அரபுச் சொல் அமல் (செயல்) எனும் சொல்லின் பன்மைச் சொல்லாகும். அது உள்ளத்தின் செயல்கள் நாவின் செயற்பாடுகள் மற்றும் அனைத்து அவயவங்களதும் செயல்களை உள்ளடக்கும். அவ்வாறே இவ்வாக்கியமானது செயல்களையும் அவற்றின் வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.

உள்ளத்திற்கும் சில செயற்பாடுகள் இருக்கின்றன. அதாவது அல்லாஹ்மீது பொறுப்பு சாற்றுதல், அவன்பால் மீழுதல் மற்றும் அவனுக்கு அஞ்சி நடத்தல் போன்ற செயல்கள் உள்ளத்தின் செயல்களாகும்

நாவின் செயற்களாவன : நாவினால் மொழிதலைக் குறிக்கும் நாவின் வார்த்தைகள்தான் மிக அதிகமானவையாகும்

அவ்வாறே அவயங்களது செயற்கள் : இரு கை, இரு கால்கள் மற்றும் அவை போன்ற ஏனைய அவையவங்களின் செயல்களைக் குறிக்கும்.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்பதன் பொருள்:
நிய்யாத் (எண்ணங்கள்) என்ற அரபுப்பதம் நிய்யத் (எண்ணம்) என்ற அரபுச் சொல்லின் பண்மைச் சொல்லாகும். அதாவது நோக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ஷரீஆவின் (மார்க்கத்தின்) பார்வையில் எண்ணம் என்பது : அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையும் வகையிலான ஒரு செயலை செய்வதற்கு உறுதி கொள்ளுதலாகும். அதன் இடம் உள்ளமாகும் இது உள்ளம் சார்ந்த செயலாகும் அவையவங்களை இதனுடன் சம்மந்தப்படுத்த முடியாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதை எண்ணினானோ அதுவே கிடைக்கும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த எண்ணத்தின் நோக்கம் வழமையான நடவடிக்கைகளிலிருந்து வணக்கங்களைப் பிரித்தறிதலும் வணக்கங்களிலும் சிலதிலிருந்து மற்றும் சிலதைப் பிரித்தறிதலுமாகும்.

வணக்கங்களிலிருந்து வழமையான நடைமுறைகளைப் பிரித்தறிதலானது :
உதாரணம்:

1. ஒரு மனிதன் உணவை தன் விருப்பத்திற்காக மட்டும் உட்கொள்கின்றான் இன்னொரு மனிதன் ''உண்ணுங்கள், குடியுங்கள்' (அல்-அஃராப் :31) எனும் வல்லாஹ்வின் கட்டளைக்காக என்று உண்ணுகின்றான்இ எனவே இரண்டாவது நபரின் உண்ணல் வணக்கமாகவும் முதலாவது நபரின் உண்ணல் வழமையான நடைமுறையாகவும் அமைந்து விடுகிறது.

2. ஒரு மனிதன் உஷ்ணத்தைக் குறைப்பதற்காகக் குளிக்கின்றான் இரண்டாம் நபர் பெருந்தொடக்கை நீக்குவதற்காகக் குளிக்கின்றான் முதலவது வழமையான நடைமுறையாகவும் இரண்டாவது வணக்கமாகவும் அமையும். ஆகவே மனிதன் பெருந் தொடக்குடையவனாக இருக்கும் நிலையில் அவன் உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக என்று கடலில் மூழ்கிக் குளித்து விட்டு பிறகு தொழுதால் அவனின் தொழுகை செல்லாது, ஏனெனில் எண்ணம் மிக முக்கியமானதாகும் அவன் வணக்கத்தை எண்ணவில்லை உஷ்ணத்தைத் தவிர்ப்பதைத்தான் அவன் எண்ணியிருந்தான்.

வணக்கங்களில் சிலதிலிருந்து மற்றும் சிலதைப் பிரித்தறிதலானது :
உதாரணம்:

ஒரு மனிதன் அபரிமித வணக்கம் எனும் எண்ணத்தில் இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுகின்றான். அடுத்தவன் கடமையான வணக்கத்தை எண்ணியவனாக இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுகின்றான். இந்த இரு வணக்கங்களும் எண்ணத்தின் அடிப்படையிலேயே பிரித்தறியப்படும் அதாவது ஒன்று நபிலாகவும் மற்றயது கடமையானதாகவும் உள்ளன.

நிச்சயமாக எண்ணத்தின் இடம் உள்ளமாகும் அது மொழியப்படவே கூடாது. ஏனெனில் நீ கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் நன்கு அறிந்தவனையே வணங்குகிறாய். அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாவான். ஆதலால்தான் நபி (ஸல்) அவர்களிடமிருந்தோ அல்லது அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அன்னாரின் தோழர்களிடமிருந்தோ அவர்கள் நிய்யத்தை (எண்ணம்) வாயால் மொழிந்தார்கள் என்ற செய்திகள் எதுவும் பதிவாகவில்லை. ஆகவே நிய்யத்தை (எண்ணம்) மொழிதல் பித்அத் ஆகும் அது சப்தமாகவிருந்தாலும் சரி அல்லது சப்தமில்லாமல் இருந்தாலும் சரி அது தடுக்கப்பட்டதேயாகும்.

'உண்மையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே உண்டு' இதுதான் செயற்களுக்குரிய (நிய்யத்) எண்ணமாகும். இதில்தான் அநேகமான மனிதர்கள் பெரும் அளவில் தவறிவிடுகின்றார்கள். தொழுகின்ற இரண்டு மனிதர்களைப் போன்று அவர்களின் தொழுகைக்கு மத்தியில் நன்மையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் போன்ற அல்லது வானத்திற்கும் பூமியிற்கும் போன்ற இடைவெளி காணப்படும். ஏனெனில் அவர்களிருவரில் ஒருவனின் எண்ணம் கலப்பற்றதாக இருந்தது மற்றவவனுடைய எண்ணம் கலப்பற்றதாக இருக்கவில்லை.

ஆவ்வாறே ஏகத்துவம் அல்லது மார்க்கச் சட்டக் கலை அல்லது அல்-குர்ஆன் விரிவுரை அல்லது நபி மொழிகளைக் கற்கக் கூடிய இரண்டு நபர்களில் ஒருவன் சுவர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானவனாகவும், மற்றயவன் சுவர்க்கத்திற்கு மிகவும் தூரமானவனாகவும் காணப்படலாம். இருவரும் ஒரே நூலையே படிக்கின்றார்கள், ஒரே ஆசிரியரிடமே கற்கின்றார்கள் அவர்களுள் ஒருவன் தான் ஒரு காழியாக (உயர் அதிகாரி) வேண்டும் ஒரு காழியிற்கு உயர்ந்த ஊதியமும் உயர் அந்தஸ்தும் கிடைக்கின்றன எனும் நோக்கத்தில் மார்க்கச் சட்டக் கலையைக் கற்கின்றான் மற்றவன் தான் கற்று ஒரு மார்க்க அறிஞனாகி முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் மார்க்கச் சட்டக் கலையைக் கற்கின்றான் ஆகவே அவர்கள் இருவருக்கும் இடையே மிகப் பெரும் வேறுபாடு காணப்படுகின்றன.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் திருப்திக்காக கற்கப்பட வேண்டி கல்வியை எவன் ஒருவன் இந்த அற்ப உலகை அடைந்து கொள்ள வேண்டும் என்று கற்கின்றானோ அவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்' (நூற்கள்: அஹ்மத், இபுனு மாஜா, அபூதாவூத்)

அடுத்ததாக நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹிஜ்ரத் செய்பவனை உதாரணம் சுட்டிக் காட்டியுள்ளார்கள்: அதாவது எவரது ஹிஜ்ரத் 'அமைகின்றதோ' என்ற வார்த்தையின் மூலம். ஹிஜ்ரத் என்ற வார்த்தை ஹஜர என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும் அரபு மொழியில் ஹஜர என்ற சொல்லின் பொருள் விட்டு விடுதல் என்பதாகும். சரீஆவின் அடிப்படையில் காபிரான ஒரு நாட்டை விட்டு விட்டு இஸ்லாமிய நாட்டுக்குக் குடிபெயர்தலைக் குறிக்கும்.

இந்த இடத்தில் ஒரு வினா எழுகின்றது அதாவது ஹிஜ்ரத் செய்தல் கட்டாயமான ஒரு கடமையா? அல்லது சுன்னத்தா ஒரு வழி முறையா?

இதற்க்கான பதில்: காபிரான நாட்டில் தனது இஸ்லாத்தினை பகிரங்கப்படுத்த முடியாத போது ஹிஜ்ரத் செய்வது ஒவ்வொரு விசுவாசியின் மீதும் கட்டாயமான கடமையாகும் ஏனெனில் ஹிஜ்ரத் செய்தாலேயன்றி அதனை பகிரங்கப்படுத்த முடியாது எனும் போது அவனது இஸ்லாம் முழுமை பெற முடியாது. எந்தவொன்று இல்லாது ஒரு கடமை முழுமை பெற முடியாதோ அந்தவொன்றும் கடமையாகும். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து ஹபஷாவிற்கு அல்லது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததைப் போன்று.

எனவே யாருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் என்றிருக்கின்றதோ அது அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவுமே இருக்கும். அதாவது ஒரு மனிதன் மக்கா வெற்றிக்கு முன்னர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நாடியவனாக மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்ததைப் போன்று அதாவது அல்லாஹ்வின் வெகுமதியை நாடி : ''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், 33:29. என்று அல்லாஹ் சொல்வதைப் போன்று.

இங்கு அல்லாஹ்வை விரும்புதல் என்பது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுதலையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினையும் விரும்புதலாகும். இத்தகைய விருப்பம் சிறந்ததாகும்.

அல்லாஹ்வின் தூதரை விரும்புதல் என்பது : அவரது நட்பின் மூலம் வெற்றியடைதலாகும் அதாவது நபிவழியில் செயல்படல், அவர்களது சுன்னாவைப் பாதுகாத்தல் அதன்பால் மக்களை அழைத்தல் அவரது மார்க்கத்தினைப் பரப்புதல் போன்றவைகளாகும். எனவே இவைகள் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் செய்கின்ற ஹிஜ்ரத்தாகும்.
இங்கு ஒரு கேள்வி :நபி (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பிறகு நாம் நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் செய்யலாமா?

பதில் : அவர் ஒரு நபர் என்றவகையில் இன்று மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய கூடாது. ஏனெனில் அவர் (உயிருடன் இல்லை) மண்ணுக்கடியில் உள்ளார். என்றாலும் அவர்களது சுன்னத்திற்காகவும் சரீஆவுக்காகவும் ஹிஜ்ரத் செய்யலாம் அதன் மீது ஆசையும் காட்டப் பட்டுள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் சரீஆவிற்கு உதவுவதற்காகவும் அதனைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு ஊருக்குச் செல்வதைப் போன்றதாகும். அவ்வாறே அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தல் எப்பொழுதும் எவ்வேளையிலும் உண்டு. ஆனால் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது சரீஆவையும் நோக்கிய ஹிஜ்ரத் அவர்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமேயாகும். அவர்கள் வபாத்தானதன் பின் அன்னாரது சரீஆவின் பால் மாத்திரமே ஹிஜ்ரத் செய்யலாம்.

எவன் ஒருவனுடைய ஹிஜ்ரத் உலகத்திற்காகவும் அதன் நன்மையை அடைவதற்காகவும் என்றிருந்தால் என்பதன் பொருள் :

அதாவது ஒருவன் ஒரு குறிப்பிட்ட ஊரில் இலாபகரமான ஒரு வியாபாரம் இருப்பதாக அறிந்து இலாபம் பெற வேண்டும் எனும் நோக்கில் அங்கு செல்கின்றான் இந்த அவனது ஹிஜ்ரத்தானது உலக நன்மையை அடைவதையே நோக்காகக் கொண்டதாகும். அவன் நாடியதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் கிடைக்கப் போவதில்லை. இன்னும் அல்லாஹ் அவனுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென்று நாடினால் அப்போது அவனுக்கு எதுவும் கிடைக்காது.

அல்லது ஒருப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக' (என்பதன் பொருள்) ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்குச் செய்யும் ஹிஜ்ரத்தாகும், உதாரணமாக ஒருவனுக்குத் திருமணம் பேசப்பட்டப் ஒரு பெண் அவனை அவனது ஊரை விட்டு விட்டு தனது ஊருக்கு குடிபெயர்ந்தால்தான் தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாகக் கூறியமைக்காக ஒருவன் மேற்கொள்ளும் ஹிஜ்ரத் இந்த ஹிஜ்ரத் அவன் எதற்காக மேற்கொண்டானோ அதற்காகவே ஆகும்.

இந்த நபிமொழயானது இஸ்லாத்தின்; சுழற்ச்சி அமையப் பெற்றிருக்கும் நபி மொழிகளுள் ஒன்றாகும். எனவேதான் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்: இரண்டு நபி மொழிகள் மீதே இஸ்லாத்தின் சுழற்ச்சி அமைந்துள்ளது. அவ்விரண்டில் ஒன்று இந்த நபி மொழியாகும், மற்றயது அன்னை ஆயிஷா (ரழி) அன்ஹா அவர்கள் அறிவிக்கும் '' யார் ஒரு செயலைச் செய்து அதில் எமது கட்டளை இல்லையோ? அது நிராகரிக்கப்படும்' என்ற நபி மொழியாகும்.

இந்த நாம் விளக்கத்திற்க்கு எடுத்துக் கொண்ட நபி மொழி உள்ளங்களின் செயற்பாடுகளின் அடிப்படையாகும், எனவே இது மறைவான செயற்பாடுகளின் அளவுகோலாகக் கொள்ளப்படும்.

ஆன்னை ஆயிஷா (ரழி) அன்ஹா அவர்களின் அறிவிப்பு அவயவங்களின் செயற்பாடுகளின் அடிப்படை பற்றியதாகும். எனவே அது வெளிப்படையான செயற்பாடுகளின் அளவு கோலாகக் கொள்ளப்படும்.

உதாரணமாக :
மிகவும் தூய எண்ணம்; கொண்ட ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நற்கூலியையும் சங்கைமிகு சுவர்க்கத்தையும் எதிர்பார்க்கின்றான், என்றாலும் அதிகமான நூதன செயல்களில் வீழ்ந்து விடுகின்றான் அவனது எண்ணத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அது சிறந்த எண்ணமாக இருக்கின்றது, என்றாலும் அவனது செயற்பாட்டின் அடிப்படையில் பார்க்குகின்ற போது அது மிக மோசமான நிராகரிக்கப்படத்தக்கதாக காணப்படுகின்றது காரணம் அது ஷரீஆவுடன் உடன்பட்டதாக இல்லை.

இந்த நபி மொழியின் சில நற்பயன்கள்:

1. நபி (ஸல்) அவர்களின் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே எனும் கூற்றிற்கிணங்க வணக்கவழிபாடுகளில் சிலதில் இருந்து சிலதைப் பிரித்தறிதல் கட்டாயமாகும். இன்னும் நடைமுறைகளிலிருந்து வழிபாடுகளையும் பிரித்தறிதல் அவசியமாகும் இதற்கு நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அதாவது ஒரு மனிதன் ழுஹர் தொழ விரும்புகின்றான் என்றால் அவன் ஏனையத் தொழுகைகளிலிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ழுஹர் தொழுவதாக எண்ணுதல் கட்டாயமாகும்.

2. அல்லாஹ்வுக்காக என்று மட்டும் கலப்பற்ற எண்ணம் பற்றி தூண்டப்பட்டுள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இங்கு மனிதர்களை இரு பிரிவாகப் பிரிக்குகின்றார்கள்:

முதற்பிரிவு : தனது கல்வியின் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமையின் வீட்டையும் விரும்புபவர்கள்.

மற்றையப் பிரிவு : அதற்கு நேர் மாற்றமானதாகும். இங்குதான் அல்லாஹ்வுக்காக என்று கலப்பற்ற தூய எண்ணம் வலியுறுத்தப் படும்.

கலப்பற்ற தூய எண்ணம் பற்றி தூண்டப் படுதலும் அதனைக் கவத்தில் கொள்ளுதலும் கட்டாயமாகும். ஏனெனில் மனிதன் படைக்கப்பட்டதன் மிக முக்கிய நோக்கம் அதுவாகும் அல்லாஹ் கூறுகின்றான்: நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல்-குர்ஆன் : 51: 56)

3. நிச்சயமாக ஹிஜ்ரத் நற்செயற்களில் நின்றும் உள்ளதாகும், ஏனெனில் அதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கமாகக் கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நிச்சயமாக நற்செயற்களில் நின்றும் உள்ளதாகும் நிச்சயமாக நீ அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாடினால் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குதலே வணக்கமாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ் நம் நபியும் தூதருமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அமைதியும் கருனையும் அருள்வானானகவும்.

அனைத்துப் புகழும் அகிலத்தாரின் அதிபதி அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.

தமிழாக்கம் : முனாப் நுபார்தீன் (சமாதான நீதவான்)

பணிப்பாளர் : அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :