தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை தசம் 9 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் 25 வது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம் தற்போது 21வது மாவட்டமாக உயர்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி திறப்பு விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் கிராமத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
'மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசேடமாகக் கொண்டு வந்த நிதிகள், மற்றும் மக்களின் பங்களிப்புக்களுடாக மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் அனைத்தும் நல்ல பாதையை நோக்கிக் சென்று கொண்டிருக்கின்றன.
இவ்வாறான பாதையில் நாங்கள் தொடர்ச்சியாகச் சென்றால் மட்டக்களப்பு மாவட்ட மக்களிடமிருந்து வறுமையினை ஒழிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மாதாந்தம் 200 மில்லியன் ரூபாய் மது பாவனைக்காக செலவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் இங்கு வெளிநாட்டுப் பால்மாக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யபட்டுக்கொண்டிருக்கின்றன.
இவற்றினை விட வளங்கள் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்து பல்வேறு பொருட்கள் நுகர்வுக்காகக் கொண்டுவரப்படுகின்றன. இந்த மாவட்டத்தினை விட்டு மக்களின் நிதிவளம் தேவையற்ற முறையில் வெளியே செல்கிறது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
இம்மாவட்டத்தின் உற்பத்திப் பொருட்களை இந்த மாவட்டத்திலேயே நுகரப்படுவதற்கும், மக்கள் தேவையற்ற விடயங்களுக்கு பணத்தினைச் செலவு செய்வதனை நிறுத்த வேண்டும்.
மக்களிடம் இது சம்பந்ததான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். பெண்கள் குடும்பத்தின் ஆதாரமாகச் செயற்பட வேண்டும்.
தற்போது பல நிதி நிறுவன அமைப்புக்கள் மக்களின் வீட்டின் வாசலுக்கு வந்து மக்களிடம் மிக இலகுவாக கடன்களைக் கொடுக்கின்றார்கள், ஆனால் அவர்கள் அக்கடன்களை மீள அறவீடு செய்யும் போது 28, 30, 35, வீத வட்டித் தொகைக்கு அறவீடு செய்கின்றார்கள்.
ஆனால் திவிநெகும வங்கியின் மூலம் சமூர்த்தி பயனாளிகள் தவிர ஏனைய மக்கள் உட்பட அரச உத்தியோகஸ்தர்களும் குறைந்த வட்டி வீத்தில் கடனைப் பெற்றுக்கொள்ள கூடிய வங்கியாக செயற்படுகின்றது. எனவே இந்த வங்கியின் மூலம் கடனைப் பெற்று மக்கள் அவர்களது பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் அபிவிருத்திக்கென பாரியதொரு தொகையினைக் கொண்டு வந்தாலும், அவற்றின் பயன்களைப் பெறுவதற்கு மக்கள் உணர்வு பூர்வமாகச் செயற்பட வேண்டும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment