நாட்டின் ஆட்சி மாற்றம் அவசியமானதே. எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க தயாரில்லை என தெரிவித்த ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 1987 காலப்பகுதியில் ஜே.வி.பி. யினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கு மன்னிப்புக் கோருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. யின் நிலைப்பாடு மற்றும் கட்சியின் தலைவர் சர்வதேச ஊடகம் ஒன்றின் முன்னிலையில் மன்னிப்புக் கோரியமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தற்போது தேவைப்படுகின்றது. மக்களும் அதனை விரும்புகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எமது நிலைமை தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம். அரசாங்கம் மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகிய இரு சாராரில் எவரேனும் ஒருவர் பக்கம் ஜே.வி.பி. நிற்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
எனினும் நாம் ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரித்து செயற்பட மாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் நேர்த்தியானதொரு வேலைத்திட்டம் இல்லாத சந்தர்ப்பத்தில் எமது வாக்குகளை அவர்களுக்கு வழங்குவதனால் மக்களை ஏமாற்ற நேரிடுமே தவிர ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை. அதற்காக அரசாங்கத்தை ஆதரிப்பதாக நினைக்கவில்லை. எனினும் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் ஜே.வி.பி. மேற்கொள்ளும்.
ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க சர்வதேச ஊடகமொன்றில் வெளியிட்ட கருத்து தற்போது சில ஊடகங்களில் வினவப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே 1987 – -1989 காலப் பகுதியில் ஜே.வி.பி. கிளர்ச்சி கால கட்டத்தில் எம்மால் 6 ஆயிரத்திற்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஏற்றுக் கொள்ள முடியாதவை. எம்மால் சில சம்பவங்கள் இடம்பெற்றமை உண்மையே அதற்கு மன்னிப்புக் கோருகின்றோம்.
இதனையே தலைவரும் குறிப்பிட்டார். எனினும் 6ஆயிரம் பேரளவில் கொல்லப்பட்டது முழுப் பொய். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சியினால் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை மறந்து விட்டனர். அவர்கள் செய்த கொலைகளையும் ஜே.வி.பி. மீது சுமத்தி எம்மை குற்றவாளியாக்கி விட்டனர். அவை எது தொடர்பிலும் பொறுப்பு கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment