ஐ.நா.விசாரணைக்கு எதிராக ஆளும் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எம்மால் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.
இல்லையேல் பிரேரணைக்கு இணங்கப்போவதில்லை. அரசாங்கத்தின் பதிலிலேயே எமது முடிவு தங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட கருத்தினை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,சர்வதேச விசாரணைக்கு எதிராக ஆளும் தரப்பினரால் பிரேரணையொன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென தற்போது அரசாங்கம் வலியுறுத்துகின்றது. இவை எதுவும் ஐ.நா. விசாரணைக் குழுவினை தடுக்கவோ அல்லது சர்வதேச அத்து மீறலை கட்டுப்படுத்தவோ மேற்கொள்ளப்படவில்லை. இது முற்று முழுதாக அரசாங்கம் எதிர்கால தேர்தலை நோக்கிப் பின்னும் சூழ்ச்சி வலையே.
பிரேரணையொன்றினை சமர்ப்பித்து அதற்கு ஆதரவாக கைதூக்குவோரை தேசப்பற்றுள்ளவர்கள் எனவும் எதிராக செயற்படுவோரை தேசத் துரோகிகள் எனவும் முத்திரை குத்தி மக்கள் மத்தியில் வாக்குகளை பெற்றுக்கொள்ள நினைக்கும் அரசாங்கத்தின் தந்திரமே. எனவே அரசாங்கம் சூழ்ச்சிகளை செய்து அதன் மூலம் நாட்டிற்கு நன்மை ஏற்படுமெனின் ஜே.வி.பி.யும் அந்த வழியில் செல்லும். எனவே எம்மால் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் அத்தியாவசியமான ஆறு யோசனைகளை நாம் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்து பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளோம். அவையாவன,
I) ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் அத்து மீறிய தாக்குதல்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்கள் ஜனநாயக ரீதியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களில் இராணுவம் மற்றும் அரச சார் குழுக்கள் அத்து மீறிய தாக்குதல்களை மேற்கொண்டது. இதுவரையில் அரசாங்கம் எவ்வித தீர்வும் காணவில்லை.
II) ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களின் தாக்குதல் 2006ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 09 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். 27 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் அரசாங்கம் வாய் மூடியுள்ளது. பல ஊடகங்களும் தாக்கப்பட்டது. இதை கண்டறியப்பட வேண்டும்.
III) அரச காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொலை தொடர்பில் அரசாங்கம் அமைதி காக்கின்றது. கணேசன் நிமலரூபன் உள்ளிட்ட பல கைதிகளை சுட்டுக்கொன்றது யார்? அதற்கு தீர்வு என்ன?
IV) பொதுமக்கள் மற்றும் சமூகவியலாளர்களின் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பொது மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்வு.
V) சட்டத்தை பாதுகாப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் குறிப்பாக சட்டத்தரணிகள் மீதான தாக்குதல்கள்
VI) மத மற்றும் தேசிய ஒற்றுமையினை குழப்பும் அமைப்புக்களையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தல்.
இவ் ஆறு கோரிக்கைகளையும் ஆளும் தரப்பின் பிரேரணையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் அடுத்த மூன்று மாத காலப்பகுதியில் இவை அனைத்திற்குமான தீர்வினை பெற்றுத்தர வேண்டும். அவை ஏனைய கட்சிகள் விடும் கோரிக்கைகள் போல் கருத வேண்டாம். ஜே.வி.பி. எப்போதுமே உறுதியான நிலைப்பாட்டில் உள்ள கட்சி. எனவே நாம் முன்வைத்துள்ள விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே எமது முடிவினை தீர்மானிப்போம். இப்போது சந்தர்ப்பத்தினை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளோம். எனவே அவர்களின் பதிலிலேயே தீர்வு தங்கியுள்ளது.
மேலும் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணாது காலத்தை கடத்துகின்றது. எனினும் நாம் இந்தப்பிரச்சினையினை முழுமையாக அழிக்கப் பார்க்கின்றோம். அதேபோல் பாராளுமன்றில் பிரேரணைகளை கொண்டு வருவதனால் ஐ.நா விசாரணைகளை தடுக்க முடியாது. அவ்வாறு எம்மால் செய்ய முடியும் என்றால் சர்வதேச விசாரணையினை இந்தப்பிரேரணை தடுக்குமெனில் அத்தோடு ஐ.நா.வின் செயற்பாடுகள் தோற்று விடும். அவர்களின் பலம் குறைந்து விடும். அதற்கு சாத்தியமில்லை. எனவே இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதனூடான உள்நாட்டு சுயாதீன விசாரணையொன்றினை நடத்துவதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment