மொரட்டுவை ஹொரேதொடுவையில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டு பள்ளிவாசலின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளது. வழமைபோல் பள்ளிவாசலின் செயற்பாடுகள் முடிவடைந்து அவற்றை மூடிவிட்டு சென்ற பின் அந்தப் பள்ளிவாசல் மீது போத்தல்களால் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டே கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி. அவர் இதுபற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்:
இன்று அதிகாலை வழமைபோல் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்க பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வந்தபோது தான் இது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. காலையில் நானும் உடனடியாக அந்த பள்ளிவாசல் பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டேன். நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதும், இவை தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் இந்த நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் தலைகுனிவை ஏற்படுத்த வழிவகுக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் நடைnhற்று வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அங்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளிப்பது நமது நாட்டுக்கு சர்வதே அரங்கில் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பதுளையில் 13 வயது சிறுவன் தாக்கப்பட்டமை தொடர்பாக பெலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் யார் என்பது ஆதாரங்களுடனும் அடையாளங்களுடனும் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்கியவரை கண்டு பிடிக்காமல் தாக்குதலுக்கு ஆளான சிறுவனும் அவனது பெற்றோரும் பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தலுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் இதுதான் இந்த நாட்டில் சாதாரண மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள நிலை.
பதுளை நகரில் மாஷா என்ற கடைக்குள் புகுந்து அடாவடித் தனம் புரிந்தவர்களும் இன்னும் கைது செய்யப்படவில்லை. எல்லா இடங்களிலும் பொலிஸார் ஒரே விதமாக தமது கடமையில் இருந்து தவறி வருகின்றனர். அப்படியானால் ஒரே கட்டளையின் அடிப்படையில் தான் இவர்கள் பணிபுரிகின்றனரா? ஏன்ற சந்தேகம் மேலும் வலுவடைகின்றது. அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச மட்டத்தில் தலைகுனிவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் வகையிலும் பொலிஸாரை இயங்க விடாமல் தடுப்பது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். முஸ்லிம்கள் விடயத்தில் மட்டும் தான் பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபுறத்தில் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்ட சந்தர்ப்பங்களில் பொலிஸார் எந்தளவு வேகமாகச் செயற்பட்டுள்ளனர் என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். பொலிஸார் காட்டும் பாரபட்சம் இந்த நாட்டுப் பிரஜைகளான இன்னொரு சமூகத்திடம் அவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது.
இந்த நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதை பாரபட்சமின்றி அமுல் செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.அப்போது தான் நாட்டு மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியும்.
So
0 comments :
Post a Comment