சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வு




டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் 

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 
இலங்கைக்கான கொரிய குடியரசு தூதுவர் வொன் சாம் சாங்க், அமைச்சர் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (13) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார். 

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

பெரும்பான்மையானோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலான பாராளுமன்ற முறைமையே இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு இலங்கையில் உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல கட்சி ஜனநாயகம் நிலவி வரும் இந் நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அபிப்பிராயங்களையும், நிலைப்பாட்டையும் முன்வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கூட்டரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன. 

முன்னர் காலனித்துவ நாடுகளாக இருந்து பின்னர் சுதந்திரமடைந்த போதிலும் அவ்வாறான பல நாடுகளில் சாதிப்பிரச்சினை காணப்படவே செய்கின்றது. 

இலங்கையில் இனப் பிரச்சினையை பொறுத்தவரை தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வன்முறையின் பால் நாட்டம் செலுத்திய அமைப்புகள் இருந்தன. 

இனப்பிரச்சினையானது நாடுகளுக்குள் இனங்களுக்கிடையில் துருவப்படுத்தலை அதிகரித்துள்ளது. உங்களது நாடான கொரியாவில் யுத்தம் நாட்டை இருவேறாக பிரித்துவிட்டது. 

இலங்கையில் சில போது அரசியல் ரீதியான தகராறுகள் தோன்றிய போதிலும் கூட, ஒரு போதும் இந்த நாடு இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடாகவே இந் நாடு தொடர்ந்தும் இருந்து வருகிறது. 

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது. 

இலங்கையில் நீதித்துறை முக்கியமான ஒரு துறையாகும். சட்டமும் ஒழுங்கும் சரிவர பேணப்படுவது ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமாகும். 

இலங்கை பாரம்பரிய பொருள்கள் பலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இலங்கையில் வர்த்தகத்திற்கும், முதலீடுகளுக்குமான வாய்ப்புகள் நிறையக் காணப்படுகின்றன. அதனை தென்கொரியா நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

இலங்கையின் முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் கொரிய குடியரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாகக் கூறிய தூதுவர் வொன் சாம் சாங், நீதியமைச்சர் என்ற வகையில் மட்டுமல்லாது, சிறுபான்மையினரை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சி என்ற தலைவர் முறையில் சில தெளிவுகளை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிராக சில இனவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் அறிந்துகொள்ள விரும்பினார். 

தூதுவருடன் தென்கொரியத் தூதரகத்தின் கவுன்சிலர் செல்வி ஜி இயுன் ப்யோ, நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :