ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உளவுத்துறை பற்றி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இன்று இராணுவ ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் மாறுபட்ட பல்வேறு கருத்துக்களை ஊடகங்கள் மூலம் முன்வைத்துள்ள நிலையில் அவ்விடயம் குறித்து எங்கள் கவனம் திரும்பியுள்ளது என ஜோன் அமரதுங்க எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர எம்.பி. தொடர்பாக அரச தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
உளவுத்துறை குறித்து யோசனை மற்றும் முறைப்பாடு என்பவற்றை முன்வைப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் உள்ளன. அவற்றுள் முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் உளவுத்துறை சம்பந்தமாக கருத்துக்கள் வெளியிடுவதற்கு தயாராவதாக தெரியவரும் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் அவ்வாறான தகவலை வெளியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அவர் சார்ந்த கட்சியின் தலைவருடன் கலந்துரையாடி பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் மங்கள எம்.பி.யுடன் அவ்வாறானதொரு கலந்துரையாடல் நடத்தப்படவில்லை.
இரண்டாவதாக இவ்வாறான யோசனைகள் மற்றும் வெளிப்படுத்தல்கள் விசேட பிரச்சினைகள் எழுகின்ற போது முன்வைக்கலாம். பேருவளை சம்பவம் தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பவற்றுக்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அதனை விசேட பிரச்சினையாக கருதலாம்.
மூன்றாவது விடயம் உளவுத்துறையினரின் பெயர்களை விசேட காரணமொன்றின் போதே வெளிப்படுத்தலாம். எனினும் மங்கள சமரவீர எம்.பி உளவுத்துறையினரின் பெயர்களை எச்சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தவில்லை. அவர் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரது பெயரையே குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டுள்ளன. கூடுதலான சந்தர்ப்பங்களில் அரச ஊடகங்களில் இவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. உளவுத்துறை பொறுப்பாளரின் பெயர் விபரங்கள் கலந்துரையாடலின் போது உட்படுத்தப்படுவதால் அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தியதாகவோ சட்டத்தை மீறியதாகவோ எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளாது.
நான்காவதாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் உண்மைக்குப்புறம்பாக அல்லது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது அது குறித்து உரிய அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரோ இச் செய்திக்கு இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறான தகவல் வெளியிடப்பட்டிருக்குமாயின் அதனை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்படுவதே முறை. இருந்தும் உளவுத்துறை பிரிவினரின் பெயர் வெளியிடப்பட்டமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே தவிர மங்கள சமரவீர எம்.பி முன் வைத்த குற்றச்சாட்டினை அரசு இதுவரை நிராகரிக்கவில்லை.
அடுத்ததாக இராணுவ ஊடகப்பேச்சாளருக்கு உளவுத்துறை குறித்து கருத்து வெளியிடுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. உளவுத்துறை முப்படையின் கீழ் இயங்குவதில்லை. அதனால் அவர்களால் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது. எனவே, இராணுவ ஊடகப் பேச்சாளர் இது குறித்து கருத்துத் தெரிவிப்பதானது பொதுத்தன்மையற்ற நடவடிக்கையாகும்.
அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறது. இராணுவத்தினருக்கு தொடர்பில்லா விடயங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எதிர்காலத்தில வேறு அமைச்சுகள் குறித்தும் இராணுவ அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடாகவே இதனை நாம் கருதுகின்றோம்.
அரசாங்கம் இராணுவ அதிகாரத்தையே பயன்படுத்துகிறது என்பதற்கு மங்கள சமரவீர எம்.பி.யின் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
மங்கள சமரவீர எம்.பி குறித்து முறைப்பாடொன்றும் இதுவரை பொலிசாருக்கு கிடைக்காத போதும் ஊடகங்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர அரசின் இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பேருவளை சம்பவத்துக்கு உளவுத்துறைக்கு தொடர்புள்ளது என்ற இரகசியத்தை வெளியிட்டுள்ளார் என்பதற்காகவே அவர் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறுகின்றார்.
பேருவளை சம்பவத்துக்கு உளவுத்துறை தொடர்புபட்டுள்ளதை பேச்சாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.17ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிய இவ்வரசாங்கம் அனைத்து அரச சேவையாளர் களையும் அரசியல் மயமாக்கியுள்ளது. தற்போது இராணுவத்தினரையும் அரசியல் மயமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
ஆகவே, இவ்விடயம் குறித்து பாராளுமன் றத்தினதும் சர்வதேச பாராளுமன்ற அமைப்பினதும் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது..
0 comments :
Post a Comment