கொழும்பு, - கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்ய எடுத்துச்செல்லப்பட்ட போலி 5000 ரூபா நாணயத் தாள்கள் 400 தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸவின் சகோதரியுமான துலாஞ்சலி ஜெயக்கொடி கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் நேற்று இரவு விசேட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன், அவருக்கு குறித்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 400 யும் வழங்கியதாகக் கூறப்படும் நபரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் கறுவாத் தோட்டம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்குச் சென்றுள்ள துலாஞ்சலி ஜெயக்கொடி, அங்கு 20 இலட்சம் ரூபாவை (5000 ரூபா நோட்டு 400) வைப்பிலிட்டதாகவும் அந்த பண நோட்டுக்கள் போலியானவை என்பதை அறிந்த வங்கி அது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரமே குறித்த விசாரணையும் சந்தேகநபரின் கைதும் இடம்பெற்றதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
துலாஞ்சலி ஜெயக்கொடி வைப்புச் செய்த 5000 ரூபா நோட்டுக்கள் போலியானவை என வங்கியானது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு முதலில் தகவல் கொடுத்துள்ளது. இதனையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு போலி நாணயத்தாள் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைகள் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட துலாஞ்சலி அங்கு விசேட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது தனக்கு குறித்த பணத்தொகையை பிறிதொரு நபரே வழங்கியதாக துலாஞ்சலி ஜெயக்கொடி தொிவித்துள்ளார். எனினும் துலாஞ்சலி ஜெயக்கொடியிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியதுடன் அந்த விசாரணைகளானது நேற்றிரவு 7.30 மணியையும் கடந்து தொடர்ந்தது. அத்துடன் அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து துலாஞ்சலி ஜெயக்கொடிக்கு அந்த பணத்தொகையினை வழங்கியதாக கூறப்படும் நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். துலாஞ்சலி ஜெயக்கொடி வழங்கிய தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டபோதே குறித்த நபரை கைதுசெய்ய முடிந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தொிவித்தார்.
0 comments :
Post a Comment