ஈராக்கிய திக்ரித் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகள் - நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் விடுவிப்பு


ஈராக்கின் திக்ரித் நகரின் கட்டுப்பாட்டை நேற்று புதன்கிழமை மாலை கைப்பற்றிய போராளிகள் அங்கிருந்து நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.

அவர்கள் முதல் நாள் செவ்வாய்க்கிழமை எண்ணெய் வளம் மிக்க மொசுல் நகரை கைப்பற்றியதையடுத்து அந்நகரிலிருந்து சுமார் 500,000 பேர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
சதாம் ஹுசைனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய போராளிகள் அங்கிருந்த அந்நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியுள்ளனர்.
 
இந்நிலையில் ஈராக்கிய தலைநகர் பக்தாத்திலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தை  போராளிகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் அங்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மொசுல் மற்றும் திக்ரித் நகர்களைப் போன்று அந்நாட்டின் வட பகுதியிலுள்ள பல நகர்கள் ஐ.எஸ்.ஐ.எல். போராளி  குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
முன்னாள் மதபோதகர் அபு பாகர் அல் - பக்டாடிக் தலைமையிலான போராளிகள் பாரிய பெயஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கைப்பற்றலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 
 
அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்த 250 பாதுகாப்பு படைவீரர்கள் அந்த நிலையத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.
 
மொசுலின் நகரிலுள்ள துருக்கிய பிரதிநிதிகள் அலுவலகத்திலிருந்து அதன் தலைவர் 3 பிள்ளகள் மற்றும் அநேகர் துருக்கிய விசேட படையினர் உட்பட 48 துருக்கியவர்களை போராளிகள் புதன்கிழமை கடத்திச் சென்றுள்ளனர்.
 
ஏற்கனவே போராளிகளால் 28 துருக்கிய லொறி சாரதிகள் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி கடத்தப்பட்ட துருக்கிய பிரஜைகளின் பாதுகாப்பு  தொடர்பில் துருக்கிய அரசாங்கம் கவலையடைந்துள்ளது. 
 
இது தொடர்பில் துருக்கிய வெளிநாட்டு அமைச்சர் அஹ்மட்டவுடோக்லு விபரிக்கையில் தமது நாட்டு இராஜ தந்திரிகள் மற்றும் பிரஜைகளுக்கு  தீங்கு விளைவிக்கப்படும் பட்சத்தில் கடும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
எமது பிரஜைகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தாம் தற்போது அமைதி காப்பதாகவும் அதனை போராளிகள் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது எனவும் அவர் கூறினார்.
 
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டில் திக்ரித் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் மாகாண ஆளுநர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
 
இந்நிலையில் வடஈராக்கிய நகரான கிர்குக்கை பிராந்திய குர்திஷ் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். 
 
அந்நகரை விட்டு இராணுவத்தினர் வெளியேறியதையடுத்தே மேற்படி போராளிகள் அந்நகரை கைப்பற்றியுள்ளனர். 
குர்திஷ் போராளிகள் மொசுல் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :