இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்று அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கனவு காண்கிறது. ஆனால், மக்கள் இன்று விழிப்புடனும் தெளிவாகவும் இருக்கின்றார்கள்.
அத்தோடு, அரசாங்கத்தின் போலி நாடகத்தினையும் அறிந்து வைத்துள்ளார்கள். ஆகையினால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படுகின்ற அபாயங்களை தடுத்து நிறுத்துவது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையிலும் தமது கடமையாகும். அப்படியிருக்கும் போது மங்கள சமரவீர வெளியிட்டுள்ள கருத்துக்களை அரச இரகசியங்களை வெளியிட்டாரென கூறி அவரை கைது செய்ய முற்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு சிங்கள மக்களின் இன ரீதியான எண்ணங்களை தூண்டி அதன் மூலம் ஆட்சிபீடம் ஏறியது. அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு பேச்சவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டார். அவ்வேளையில், அதற்கெதிராக பிரசாரம் செய்து சிங்கள மக்களுடைய வாக்குகளை மஹிந்த ராஜபக் ஷவினால் பெற்றுக் கொள்ள முடிந்தது.
அன்று பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வினை விரும்பாத புலிகள் இயக்கம் யுத்தத்தின் மூலம் தனி நாட்டை அடைய முடியுமென்ற எண்ணத்தில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க முற்பட்டது. அதன் மூலம் ஆட்சிபீடம் ஏறிய மஹிந்த ராஜபக் ஷவினுடைய அரசாங்கம் புலிகள் இயக்கத்தை அழித்து யுத்த வெற்றி பெற்றது.
இதனை சிங்கள மக்கள் அங்கீகரித்தார்கள். அதன் மூலம் அடுத்த தேர்தலிலேயே அவரால் சிங்கள மக்களுடைய அமோக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
இன்று யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள போதும் பொருளாதார ரீதியாக நாடு எவ்வித முன்னேற்றமும் அடையாத நிலையில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல தியாகங்களையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறிய சிங்கள மக்கள் இன்று தமது பிரச்சினைகளுக்கு தீ்ர்வு வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றார்கள். ஆகையினாலேயே மீண்டும் மக்களிடை.யே உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதன் மூலமாக தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் முற்படுகின்றது.
இதனடிப்படையில் இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, பொதுபல சேனா அளுத்கம பகுதியில் நடத்திய கூட்டத்தில் இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாலேயே அளுத்கம பகுதியில் பாரிய வன்முறை ஏற்பட்டது. இரண்டு அமைச்சர்கள் வெளிப்படையாக கூறிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களுக்கு மத்தியில் மக்களை ஏமாற்றும் வகையிலான பல்வேறு விளக்கங்களையும் கருத்துக்களையும் அரசாங்கம் கூறிவருகின்றது. இவற்றையெல்லமாம் தொடர்ந்தும் மக்கள் நம்புவார்கள் என அரசாங்கம் கனவு காண்கிறது என்றார்.
0 comments :
Post a Comment