எமது மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு, திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் 20 வீதமாக இருந்த எமது காட்டுவளம் 8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவுகளை நாம் உடனடியாகவே அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
பெரியகல்லாறு வை.கே. எவ்.எச்.எஸ். நிறுவனமும் விரண்டினா தொழில் நிலையமும் இணைந்து நடாத்திய தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறி ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;
இயற்கை அனர்த்தத்தினாலும் யுத்தத்தினாலும் முழுமையாக பாதிக்கப்பட்ட இனமாக நாம் இருக்கின்றோம். அரசு எதற்கெடுத்தாலும் நிவாரணம் என்ற நிலைப்பாட்டுடன் நின்று விடுகின்றது. ஆனால், எதற்கும் நிரந்தரத்தீர்வு என்பது அரசின் அகராதியில் இதுவரை இல்லை. இதனால் தொடர்ந்தும் நாம் பாதிப்புகளில் இருந்து மீட்சி பெற முடியாதவர்களாக இருக்கின்றோம்.
எனவே, பலவகையிலும் மீட்சியை நோக்கி பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். கல்வி, பொருளாதாரம் இரண்டிலும் நாம் முழு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் எமக்கேற்பட்டிருக்கின்றது. பல சவால்களை நாம் சதா சந்தித்துக்கொண்டே இருக்கின்றோம். எனவே, நாம் கடும் முயற்சியும் பிரயத்தனங்களும் செய்தே சகல துறையிலும் முன்னுக்கு வரவேண்டியிருக்கின்றது. இப்போது கல்வியை தொழில்நுட்பத்துறை பக்கம் அரசு திருப்பியுள்ளது. எனவே, நாமும் அத்துறையிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலவசம் என்ற இயல்பான புறக்கணிப்புக்கு அப்பால் வன்னி இளைஞர், யுவதிகள் இங்கு விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிக்கு வருகை தந்துள்ளமையானது வரவேற்கத்தக்க விடயமாகும்.
போர்க்காலத்தில்கூட வன்னியில் பங்கரில் படித்து பரீட்சையில் முதலிடம் பெற்று வரலாறு படைத்த மாணவனுக்கு கொழும்பில் பாராட்டு விழா நடந்ததை அவ்விழாவில் கலந்து கொண்டவன் என்ற வகையில் நினைத்துப் பார்க்கின்றேன். அதே மகிழ்ச்சியுடன் நான் இன்று உங்களைப் பார்க்கின்றேன்.
நெதர்லாந்திற்கும் எமக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. அவர்கள் முன்பு எமது நாட்டை ஆண்டவர்கள். சுனாமி அடித்தபோது ஓடி வந்து எமக்கு உதவினார்கள். போரின் போதும் நிர்க்கதியான எமக்கு நிறைவான பல உதவிகள் செய்தார்கள். அத்தகைய நாட்டின் உதவியுடன் இயங்கும் இந்த நிலையம் முறைசார் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து உலக தரத்திற்கு உங்களை உருவாக்குவதென்பது உண்மையில் பாராட்டுக்குரிய விடயமாகும். எனவே, இத்தகைய சமூகத்தை முழுமையாக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை இணைந்து மேற்கொள்ளும் இரு நிறுவனங்களின் சேவைகளும் பெறுமதியானவை எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment