SLMC தேசியத் தலைவர் அம்பாரை மாவட்டத்தில் களமிறங்குவது வரலாற்றுத் தேவையாகும்-றனீஸ்

எம்.வை.அமீர்-

லங்கை முஸ்லிம்களின் அடையாள இருப்பு என்றுமில்லாதவாறு கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒற்றுமைப்பட்டு தங்களது அரசியல் பலத்தை ஒன்று திரட்டி நமக்கெதிராகப் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் நாசகார சதித்திட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலைமை எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திற்கொரு அரசியல் கட்சி என்று திட்டமிடப்பட்டு நமது அரசியல் ஒற்றுமை சீரழிக்கப்பட்டதால் சமூக ஒற்றுமையை பதவிகளுக்காக விலை பேசி விற்ற சமூகமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். இந்நிலை தொடருமானால் நமது சமூகத்தின் எதிர்காலம் சூன்யமாகி விடும் நிலையே ஏற்படும். இந்நிலையில் அம்பாரை மாவட்டத்தில் 03முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளையும் பெற்றேயாக வேண்டிய வரலாற்றுத் தேவை உருவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத ஏனைய கட்சிகளின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜ விசுவாசம் கோவணத்தை உருவினாலும் பரவாயில்லை எனும் நிலைக்கு வந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாகவே முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெறுவதை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பெறுவது ஆரோக்கியமானது என்பதை கடந்த காலம் தெளிவாக உணர்த்தியுள்ளது. அரசுக்கான விசுவாசத்தையும் அதே நேரம் நியாயமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயங்காத திராணியுள்ள ஒரே கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை எமது கட்சி கடந்த காலங்களில் உணர்த்தியுள்ளது.

இந்நிலையில் அம்பாரை மாவட்டத்தில் நமக்கேயுரிய நியாயமான 03 பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெறுவதற்கான ஒரு வரலாற்றுத் தேவையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மாண்புமிகு நீதியமைச்சர் அல்ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீம் அவர்களை முதன்மை வேட்பாளராக நிறுத்திப் போட்டியிடுவது எதிர்வரும் பொதுத் தேர்தலில் வரலாற்றுத் தேவையாகும். கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தின் 03 முஸ்லிம் தொகுதிகளுக்கும் 03முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கான வியூகங்களை வகுக்கத் திராணியுள்ள ஒரே கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நாம் கண்ணூடே கண்டிருக்கின்றோம்.

இந்நிலையில்தான் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மாண்புமிகு நீதியமைச்சர் அப்துல் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் களமிறங்குவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத பிற சக்திகள் கழுகுக்கண் கொண்டு நோக்குவதுடன் நனைகிற ஆட்டைப் பார்த்து ஓநாய் அழுத கதையாக நீலக்கண்ணீர் வடிக்கின்றனர்.

 ஒரு பிரதேசத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்காக முழு மாவட்டத்தின் முஸ்லிம் வாக்குகளையும் கபளீகரம் செய்து ஆண்டாண்டு காலமாக ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அதுவும் சமூகத்திற்காக அல்லாமல் தனிமனிதனின் சுயநலத்துக்காக தாரை வார்ப்பதை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ தலைவரின் தலைமையில் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசியத்தின் ஆணிவேரான அம்பாரை மாவட்டத்தில் 03ஆசனங்களையும் நாடு தழுவிய ரீதியில் போனஸ் ஆசனங்களையும் வெல்லும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி வியூகத்துக்கு தங்களது முழு ஆதரவையும் நூறு வீதம் தெரிவித்து எமது சமூகத்தின் அடையாள இருப்பைத் தக்க வைக்க அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.

சிறு சிறு கட்சிகளாகவும் குழுக்களாகவும் சிதறுண்ட தமிழ் அரசியல் குழுக்களும் ஆயுதக் குழுக்களும் ஒன்று திரண்டதன் பின்னர் அடைந்திருக்கின்ற அரசியல் வெற்றியை முஸ்லிம்களாகிய நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அபிவிருத்தியில் பேராசை கொண்டு அரசியல் செய்து இன்று அந்த அபிவிருத்தியை நுகர்ந்து கொள்ளவோ அதன் பலாபலன்களை அடையவோ சந்தர்ப்பமற்று “பிச்சை வேண்டாம் நாயைப் பிடித்தால் போதும்” எனும் நிலைமைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியதாகும்.

பௌத்தத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் மதத் தீவிரவாதத்தின் பிடியிலும், பெரும்பான்மை ஏகபோகத்தின் கோர முகங்களுக்கிடையிலும் அகப்பட்டு நமக்கான சுய நிர்ணய அடையாளங்களைத் துறந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுத்தும் சமகால இலங்கையின் அரசியல் முஸ்லிம்கள் தங்களது அரசியல் முன்னெடுப்புக்களை ஒற்றுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் முன்னெடுக்க வேண்டும்.

ரெலோ, பி.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற குழுக்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்க முடியுமென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஏன் முஸ்லிம் பிரதேசக் கட்சிகளும், குழுக்களும் ஒன்றிணைய முடியாது.

இந்நிலையில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பலவீனப்படுத்த பல்வேறு சக்திகளாலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும், ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைமைத்துவம் இம்மாவட்டத்தில் களமிறங்கும் போதுதான் எமக்கு உரித்தான 03 பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களும் பெறப்படும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :