அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மூன்று சமூகங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
அண்மைய கலவரங்கள் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தர்கா நகர், பேருவளை, வெலிப்பிட்டிய, அதிகாரிகொட, துந்துவை போன்ற முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் கடந்த 15ஆம் திகதி அரங்கேற்றப்பட்ட இனச்சுத்திகரிப்புக்கான ஒத்திகை சம்பவங்களின் போது சம்பவித்த அழிவுகள் உயிரிழப்புக்கள் என்பனவற்றை விசாரணை செய்வதற்காக பொலிஸாரும், உளவுப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான விசாரணைகளின் போது வெளிப்படைத் தன்மை பேணப்படுமா என மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. வட்டரக்க தேரர் தன்னைத்தானே காயப்படுத்தியதாக வரும் செய்திகளையும் வெலிப்பிட்டிய என்ற கிராமத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப் பலியாகிய இருவரின் மரண சான்றிதழில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களால் உயிர் துறந்ததாக குறிப்பிட்டுள்ள மாறுபட்ட கருத்துக்களையும் உதாரணமாக கொண்டு அனுமானித்தால் முஸ்லிம் மக்கள் தங்களது வீடுகளையும் வியாபாரஸ்தலங்களையும் தாங்களே அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று முடிவுகள் வெளிவந்து விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதற்கான நம்பகத்தன்மை கொண்ட பொறிமுறை கையாளப்பட வேண்டும். மூன்று சமூகங்களையும் உள்ளடக்கிய அனுபவம் வாய்ந்த துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டு குறுகிய கால எல்லைக்குள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை ஆணைக்குழுவே பரிசீலிக்க வேண்டும்.
ஏற்கனவே நடந்து முடிந்த அவலங்களின் போது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் கடமையைச் சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை அவர்களே மேற்கொள்வதென்பது மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.
விசாரணைகளை ஆரம்பிக்கும் போது பொலிஸ் மா அதிபரும் பொதுபலசேனா செயலாளரும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும்.
முஸ்லிம்களுக்கு நடந்த அனர்த்தங்களெல்லாம் சாதாரணமானவை அவற்றைப் பெரிதுபடுத்த தேவையில்லை என்ற தோரணையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருவது வேதனையைத்தருகின்றது.
முஸ்லிம் பெண்ணை தான் மணமுடித்திருந்தால் இவ்வாறான இன பேதங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று ஒருவர் எமது சமூகத்திலுள்ள பெண்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளார். இன்னொருவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தனது பாராளுமன்ற உரையின் போது
உங்களது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு இந்த அனர்த்தங்கள் நல்ல வரப்பிரசாதமாக அமையும். அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறி நமது வேதனைகளை வேடிக்கையாக நையாண்டி செய்துள்ளார். இவர்தான் அண்மையில் போர் குற்ற விசாரணை பற்றிக்குறிப்பிடும் போது தமிழர்களின் அழிவுகள் பற்றிக் கேவலமான வார்த்தைகளால் நியாயப்படுத்தியிருந்தார். சத்திர சிகிச்சை செய்யும் போது இரத்தம் சிந்துவது சகஜம் தான் எனக்குறிப்பிட்டிருந்தார்கள்
முஸ்லிம்கள் தங்களது உடன்பிறப்புக்களுக்கு ஏற்பட்ட வேதனைகளின் போது தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் இவர்கள் எச்சரிக்கின்றார்கள். இவ்வாறான கருத்துக்களால் கவரப்படும் சாதாரண மக்களின் மனோபாவம் இனவாத நஞ்சூட்டப்பட்டு வருகின்றது. போதை ஏறினால் ஒருவர் அதைத் தணிப்பதற்கு ஆகக்குறைந்தது ஒரு கல்லையாவது எடுத்து ஒரு முஸ்லிமின் கடையையோ அல்லது ஒரு பள்ளிவாசலையோ நோக்கி எறிய வேண்டும் என எண்ணும் அளவுக்கு இன்று நிலைமை மாறியுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான வழிவகைகளை உடன்செயல்படுத்துவதை விட்டு ஏற்கனவே மனம் புண்பட்ட மக்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவதனை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் செய்தவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக விருப்பினும் என்ன தராதரத்தை கொண்டவராக இருப்பினும் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள பௌத்த சகோதரர்கள் நடந்த சம்பவங்களை வெறுப்பவர்களாகவே உள்ளார்கள். சிறுபான்மையினரான ஒரு சில குழுக்களால் இந்த நாட்டில் நாம் எல்லோரும் பல தியாகங்களைச் செய்து பெற்றுக்கொண்ட அமைதிக்குக் களங்கம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. எனவேதான் விசாரணைகள் நம்பகத்தன்மை கொண்டவையாக அமைய வேண்டும் என அமைதியை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு என்பன எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி சமமாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் வேதனைகளில் பங்கு கொண்டு பச்சாதபப்படும் பெரும் எண்ணிக்கையான பெரும்பான்மை சமூகத்தினர் பலம் பெறுவதால் மட்டும்தான் இந்த நாட்டை ஒரு அமைதிப்பூங்காவாக மாற்ற முடியும்” என்றுள்ளது.
0 comments :
Post a Comment