பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையாக அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த கட்சி பேதமின்றி கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையுடன் இணைந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். அதுமாத்திரமல்ல இங்கு காணப்படும் ஆளனி பற்றாக்குறை, வாகன வசதி, புதிய கட்டிடம் ஒன்றும் கொண்டுவருதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை நான் மேற்கொண்டுள்ளேன்.
மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற தொற்றா நோய் சிகிச்சை வைத்திய முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை (05) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் நஸீர் மேலும் உரையாற்றுகையில்,
இங்கு பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் அம்பாறை மாவட்டத்திற்கு இவ் வைத்தியசாலையானது இன, மத பிரதேச வேறுபாடுகளை மறந்து வைத்தியசாலை அதிகாரிகளும், ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இங்கு சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக வரும் நோயாளிக்கு மருத்துவ சேவை வழங்குவதிலும் மேலாக அந்த நோயாளியை அன்பு, கருனை, இரக்கத்துடன் அனுகிப் பழகும் போதுதான் அந்த நோயாளியின் மன ஆறுதலும், சந்தோசமும் உள்ளத்தில் ஏற்படும்.
முக்கியமாக ஒரு நிறுவனமானாலும் சரி, வைத்தியசாலையாக இருந்தாலும் சரி அங்கு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு கூட்டுப் பொறுப்புடன் செயற்படும் போதுதான் அங்கு சிறந்த சேவையையும், குறித்த இலக்கையும் அடைய முடியும். அதுமாத்திரமல்ல இப்பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகளும், முக்கிய உயர் பதவியில் கடமையாற்றும் உயர் அதிகாரிகளும், கல்விமான்களும், பொதுமக்களும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே குறிப்பிட்ட இலக்கினை அடையமுடியும்.
மிக அண்மையில்தான் இந்த மாவட்ட வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்கடர் கே.எல்.எம்.நக்பர் தனது அயராத முயற்சியினால் இந்த வைத்தியசாலையை எவ்வாறு வைத்துக் கொள்ளவேண்டும், வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பவற்றை மிகச் சரியாக செய்திருப்பது பற்றி இங்குவரும்போதே நான் அறிந்துகொண்டேன்.
இந்நிகழ்வுக்கு பங்கெற்று சில நிமிடங்களில் டாக்டர் நக்பர் எனது காதுக்குள் சில விடயங்களைப் பற்றிச் சொன்னார். அந்த தளபாடக்குறையை நான் செய்து தருகின்றேன் என்று இந்த இடத்தில் கூறுவதில் மிகச் சந்தோஷம் அடைகின்றேன். இவ்வாறான டாக்கடர்கள் இருக்கும்போது எந்த வைத்தியசாலையாக இருந்தாலும் அது ஒரு முன்னெற்றப் பாதையை அடைந்து செல்லும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமே இல்லை என்றார்.
இந் நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான ஜே.யூசுப், எப்.எப்.எச்.பர்வின், எம்.பி.எம்.றஜிஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எம்.றிஜால்தீன், யூ.கே.சம்சுதீன், எஸ்.முனவ்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment