கடந்த வருடத்துக்கான (2013) சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் விழான்போது நவமணி பத்திரிகைக்கு முதன்முறையாக திறைச்சான்றிதழ் விருது கிடைத்துள்ளது. சிறந்த பத்தி எழுத்துக்கான பி.ஏ. சிறிவர்த்தன விருதில் தமிழ் பிரிக்கான விருதை கண்டியைச் சேர்ந்த ஊடகவியலாளர் சட்டத்தரணி வைஸ் பெற்றுக்கொண்டார். நவமணியில் வெளிவரும் "இனிப்பும் கசப்பும்" என்ற பத்தி எழுத்துக்கே இச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றது.
சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கை பத்திரிகை ஸ்தபானத்தினால் 15ஆவது முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மவுன்ட் லவினியா பீச் ஹோட்டலில் நடைபெற்றபோதே இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
தலைசிறந்த பத்திரிகை ஆசிரியராக இருந்த பி.ஏ. சிறிவர்த்தனவுக்கு கெளரவமளிக்கும் வகையில், வழங்கப்படும் இவ்விருதில் சிறப்பான விடயங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பொதுவான அபிப்பிராயங்களையும் எதிர்வாதங்களையும் ஏற்படுத்தும் வகையில் துணிச்சலாகவும், சிலேடையாகவும் எழுதும் பத்தி எழுத்துகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் பணியாற்றும் பலருக்கு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த புலன்விசாரணை செய்தி, வணிக செய்தி, விளயைாட்டு செய்தி, கேலிச்சித்திரம், பக்கவடிவமைப்பு, சூழலியல் கட்டுரை, புகைப்படம், இளம் செய்தியாளர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த பத்திரிகை, சமூக அபிவிருத்தி செய்தி, சிறந்த செய்தியாளர், நெருக்கடியான சூழலில் செய்தி சேகரிப்பாளர் போன்ற பல பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை பத்திரிகை ஸ்தபானத்தின் தலைவர் குமார் நடேசன், நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், வீரகேசரி ஆசிரியர் பிரபாகரன் மற்றும் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளின் பல ஆசிரியர்களும் இந்நிகழ்வில் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கிவைத்தனர்.
0 comments :
Post a Comment